நாமக்கல் மாவட்ட பெண் தொழிலாளிக்கு கல்லூர் அரசு மருத்துவமனையில் பிரசவம்: நேரில் சந்தித்து நிதியுதவி வழங்கிய இன்பதுரை எம்.எல்.ஏ

நெல்லையை அடுத்த சுத்தமல்லி அருகே உள்ள கொண்டா நகரம் விலக்கு  பகுதியில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார்  25 பேர் கிணறு வெட்டும் தொழிலுக்காக இங்கு வந்து கூடாரம் அமைத்து தங்கி இருந்து வேலை செய்து வந்தனர்


இவர்களில் கவிதா என்ற நிறை மாத கர்ப்பிணியும் ஒருவர். 144 தடை உத்தரவு காரணமாக இவர்கள் சொந்த ஊரான நாமக்கல்லுக்கு திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். நிறைமாத கர்ப்பிணி பெண்ணான கவிதாவுக்கு எந்த நேரத்திலும் பிரசவம் நேரலாம் என்ற நிலையில் சில சமூக ஆர்வலர்களின் முயற்சியால் தனி வாகனம் மூலம் கவிதாவை மட்டும் சொந்த ஊருக்கு அனுப்ப எடுத்த முயற்ச்சிகளும் தோல்வியில் முடிந்தன.


இதற்கிடையே நேற்று காலை கவிதாவுக்கு பிரசவ வலி எடுத்ததால் கல்லூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த தகவல்கள் வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் இணையதளங்களில் வெளியானது.


இதுபற்றி அறிந்த ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை நெல்லை மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கவிதாவுக்கு உயர் சிகிச்சை அளித்து நல்ல முறையில் பிரசவம் பார்க்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.


இந்தநிலையில் நேற்றுமாலை  கவிதாவுக்கு அழகான பெண் குழந்தை சுகப்பிரசவம் மூலம் பிறந்தது. 


இதையடுத்து  இன்று பிற்பகலில் கல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் சென்ற ராதாபுரம் எம்எல்ஏ இன்பதுரை நாமக்கல் மாவட்ட தொழிலாளியான கவிதா மற்றும் அவரது பச்சிளம் குழந்தையை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் கவிதாவுக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் பரிசு பெட்டகம், குழந்தையின் பிறப்பு சான்றிதழ் ஆகியவற்றை வழங்கியதுடன்   தனது சொந்த நிதியிலிருந்து பத்தாயிரம் ரூபாயை நிதியுதவியாகவும் வழங்கினார்.


அப்போது அருகிலிருந்த கவிதாவின் உறவினர்கள் 


கவிதாவையும் அவரது கணவர் மற்றும் குழந்தை  ஆகிய மூன்று பேரை மட்டுமாவது  நாமக்கல் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்க உதவி செய்யவேண்டும் என இன்பதுரையிடம் கேட்டுக்கொண்டனர். 


அவர்களிடம் பேசிய இன்பதுரை எம்எல்ஏ மருத்துவமனையில் இருந்து நாளை அல்லது நாளை மறுநாள்  தாயும் குழந்தையும் டிஸ்சார்ஜ் ஆகும் பட்சத்தில் தனி ஆம்புலன்ஸ் மூலம் கணவன் மனைவி குழந்தை ஆகிய மூன்று பேரையும் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க தேவையான இ பாஸ் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகத்திடம் பேசி ஏற்பாடு செய்வதாக  கூறினார். இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த நாமக்கல் தொழிலாளர்கள்  இன்பதுரை எம்எல்ஏவுக்கு தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். 
அப்போது
கல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை டாக்டர் அஷ்ரப் அலி  உடனிருந்தார்.