இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் பாலகுமாரர்களே: இன்னும் ரெண்டு நாள்ல டாஸ்மாக் திறக்கறாங்க...

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு 40 நாட்களை கடந்த நிலையில், தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.


இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை 7-ஆம் தேதி முதல் திறக்க உள்ளதாக தெரிவித்து உள்ளது. 


இதற்குள்ளாக கடந்த 40 நாட்களில் பல குடிமகன்கள் மதுவிலிருந்து மீண்டு இருக்கிறார்கள். பலபேர் குவார்ட்டர் 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை தண்டம் கொடுத்து வாங்கி குடித்து தங்கள் போதை ஆசையை தீர்த்துக் கொண்டு உள்ளனர்.


இன்னும் ஒருவர் போதைக்காக சானிடைசர் குடித்து இறந்தது, வார்னிஷ் குடித்து சிலர் இறந்தது என போதையில்லாமல் இருக்க முடியாமல் உயிரை விட்ட சம்பவங்களும் நடந்தது. 


பல இடங்களில் யூ டியூப்பை பார்த்து, குக்கர் வைத்து சாராயம் காய்ச்சி பலர் கைதானார்கள். தோட்டங்களில், ஓட்டல்களில் ஊறல்கள் போடப்பட்டு மது தயாரிக்கப்பட்டது. 


வெளிமாநில சரக்குகள் கூட பதுக்கி வைத்து விற்கப்பட்டு போலீசில் சிக்கிய சம்பவங்களும் நடைபெற்றது. 


இதற்கிடையே ஊரடங்குக்கு பின்னரும், மதுக்கடைகளை திறக்கக் கூடாது என்ற பலரது பேச்சுகள் வலுப்பெற்றன. பின்னர் மதுக்கடைகளை அடைக்க அரசே முடிவு செய்து விட்டதாகவும் பேச்சுக்கள் உலவின.


இத்தணையையும் தாண்டி குடிமகன்களை குதூகலமடைய செய்ய 7 ஆம் தேதி முதல் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


நீண்ட இடைவெளிக்கு பின்னர் திறக்கப்படுவதால் மதுக்கடைகளில் சமூக இடைவெளியை எல்லாம் புறந்தள்ளி விட்டு, குடிமகன்கள் கட்டி உருளப்போவது உறுதி. 


மதுக்கடையை திறக்ககூடாது என்று ஊரடங்கில் ஸ்டேட்டஸ் போட்டும், பேசியும் தீர்த்த போராளிகள் இனி குடித்து விட்டு, ’டாஸ்மாக் திறக்காமல் இருந்திருந்தால் பல குடும்பங்கள் காக்கப்பட்டிருக்கும்’ என்கிற ரேஞ்சில் உளறுவதையும் பார்க்கத்தான் வேண்டி இருக்கிறது.


இதுதவிர பல குடும்பங்களில் பல பிரச்சினைகளும் உருவாகப்போகிறது என்பதிலும் மாற்றமில்லை.


இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பட வசனம் போல, ‘ லவ் மேட்டரு பீல் ஆயிட்டாப்ள.. ஆப் சாப்பிட்டா கூல் ஆயிருவாப்ள.. என்று பல பேர் கிளம்ப போகிறார்கள்.


 


டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பது பற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  என்ன கூறப்பட்டு இருக்கிறது?


இதோ உங்கள் பார்வைக்கு:


கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பிறப்பித்திருந்த ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை அவ்வப்போது வழங்கி வருகிறது.


மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் மதுபானக்கடைகள், சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு திறக்க அனுமதி அளித்துள்ளது.


எனினும் மதுபானக்கூடங்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் தமிழ்நாட்டை ஒட்டியுள்ள கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் மதுபானக்கடைகளை திறக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.


இதனால் தமிழ்நாட்டை ஒட்டியுள்ள ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் உள்ள மதுக்கடைகளுக்கு தமிழக எல்லைப்பகுதியில் உள்ள மக்கள் அதிக அளவில் செல்வதால், மாநிலங்களுக்கு இடையேயான மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது.


இவற்றை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டிலும் மதுபானக்கடைகளை வரும் 7.5.2020 முதல் திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. எனினும் நோய்கட்டுப்பாட்டு பகுதிகளிலுள்ள மதுபானக்கடைகள் திறக்கப்படமாட்டாது.


நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே உள்ள மதுபானக்கடைகள் மட்டும் கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு திறக்க அனுமதிக்கப்படுகிறது.


1. மதுபானக்கடைகளில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்படவேண்டும்.


2. ஒரு நபருக்கும் இன்னொரு நபருக்கும் உள்ள இடைவெளி ஆறு அடி தூரமாக பராமரிக்கப்படவேண்டும்.


3. மதுபானக்கடைகளில் ஒரே நேரத்தில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடுவதற்கு அனுமதிக்கக்கூடாது.


4. மதுபானக்கடைகள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்படுகிறது.


5. அனைத்து மதுபானக்கடைகளிலும் தேவைக்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.


6. ஒவ்வொரு மதுபானக்கடைகளிலும் தேவைகேற்ப கூடுதல் நபர்களை பணியமர்த்தி கூட்டம் சேர்வதை தவிர்க்க வேண்டும்.


மேற்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு தமிழ்நாட்டில் மதுபானக் கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. எனினும், மதுபானக்கூடங்கள் திறப்பதற்கு அனுமதி இல்லை .