கள்ளழகர் இறங்காமல் களை இழந்த வைகை: ஆற்றில் வேண்டுதல் நிறைவேற்றிய மக்கள்

மதுரைக்கு சித்திரை மாதம் நடைபெறும் திருவிழா உலகப்புகழ் பெற்றது. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவை காண பல்வேறு நாடுகள், வெளிமாநிலங்கள், வெளியூர்களில் இருந்து பக்தர்கள் கூட்டம், கூட்டமாக வருவார்கள். ஊரும் விழாக்கோலம் பூண்டு காணப்படும்.


ஆனால் இந்த ஆண்டு கொரோனாவின் கொடூர வைரஸினால் ஊரடங்கு காரணமாக  மதுரை சித்திரைத்திருவிழா ரத்து செய்யப்பட்டது. மேலும், அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவமும் நடக்காது என்று அறிவிக்கப்பட்டது. 


இந்நிலையில் மதுரையில்  இன்று மக்கள் வைகை ஆற்றில்  கள்ளழகரை மனதில் நினைத்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி சிறு வருத்தத்துடன் இருந்தாலும் மன நிம்மதியுடன் வீடுகளுக்கு திரும்பினர்.


கள்ளழகரால் களை கட்டும் மதுரை மாநகரம் இன்று களையிழந்து காணப்பட்டது. வைகை ஆற்றில் தண்ணீரும் இலலாமல் மக்கள் கூட்டமும் இல்லாமல் மதுரை மாநகரம் வரலாற்றிலேயே முதல் முறையாக சித்திரை திருநாள் காலத்தில் வெறிச்சோடியது.


இந்த ஆண்டு கொரோனாவால் நடக்காத திருவிழாவை, அடுத்த ஆண்டு சேர்த்து வச்சு கொண்டாடுவோம்... என்று மதுரை மக்கள் கண்ணீர் மல்க கூறினார்கள்.