டாஸ்மாக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் தி.மு.க கூட்டணி கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் பகுதிகளில் தி.மு.க கூட்டணி கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.     


                                                         


கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன.


இந்த மதுபானக் கடைகள் திறப்பை கண்டித்து தி.மு.க கூட்டணி கட்சிகள் சார்பில் கட்சி அலுவலகங்கள், வீடுகளில்  கருப்பு கொடி ஏந்தியும்,  கருப்பு சட்டை, அணிந்தும்,  போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.       


அதன்படி  மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி ஏம்எல்ஏ.,வும்,  ஒன்றிய தி.மு.க. செயலாளருமான ஜெயராமகிருஷ்ணன் துங்காவியில் உள்ள அவரது வீட்டின் முன்பு  கருப்பு சட்டை அணிந்தவாறு ஆர்ப்பாட்டம்  நடத்தினார்.


இதில் மாவட்ட பொருளாளர் முபாரக் அலி, சேதுபாலன், துணை செயலாளர் கோவிந்தசாமி, இளைஞரணி மதன்குமார், தெய்வசிகாமணி, ஆனந்தராஜ், தர்மராஜ், இளங்கோவன், திருமலைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இதே போல் உடுமலை நகர தி.மு.க சார்பில் நகர செயலாளர் எம்.மத்தீன் தலைமையில் பழனி ரோட்டில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நகர அவைத் தலைவர் எம்.ஏ.கே.ஆசாத், பொருளாளர் சொர்க்கம் பழனிசாமி, மாணவர் அணி தண்டபாணி மற்றும் திமுக நிர்வாகிகள் கருப்பு சட்டை, துண்டு, அணிந்து போராட்டம் நடத்தினர்.


உடுமலை நகரில் உள்ள 33 வார்டுகளிலும் தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடுமலை கபூர்கான் வீதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யு.சி.மாவட்ட செயலாளர் வி.சவுந்தரராஜன் தலைமையில் போராட்டம் நடந்தது. இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம், காங்கிரஸ் கட்சி அலுவலகம், ம.தி.மு.க கட்சி அலுவலகம், முன்பும் போராட்டம் நடந்தது.


Previous Post Next Post