பியூட்டி பார்லர்களை திறக்க அனுமதிக்க வேண்டும்: கலெக்டரிடம் கோரிக்கை மனு

5 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் பியூட்டி பார்லர்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று திருப்பூரில் அழகு கலை நிபுணர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


இதனால் திருப்பூரில் தொழில் நிறுவனங்கள் மட்டுமின்றி அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இதன் காரணமாக லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர்.


 தற்போது கொரோனா வைரஸ் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து தமிழக அரசு 34 வகையான கடைகளை திறக்க அனுமதி வழங்கி உள்ளது.  இதையடுத்து பேக்கரி, ஹோட்டல், நகைக்கடைகள் உள்பட பெரும்பாலான கடைகள் திருப்பூரில் திறக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இயல்பு வாழ்க்கை திரும்ப தொடங்கி உள்ளன.


ஆனால் சலூன் கடைகள், ஸ்பா மற்றும் பியூட்டி பார்லர்களை திறக்க இதுவரை தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில் அகில இந்திய சிகை அலங்காரம் மற்றும் அழகுத்துறை சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் அனிதாமூர்த்தி தலைமையில் திருப்பூரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட பெண் அழகு கலை நிபுணர்கள் நேற்று திருப்பூரில் மாவட்ட கலெக்டர் ப.விஜயகார்த்திகேயனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.


அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, திருப்பூர் மாநகரில் 1500 பியூட்டி பார்லர்கள் உள்பட மாவட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பியூட்டி பார்லர்கள் உள்ளன. கடந்த 52 நாட்களாக ஊரடங்கு உத்தரவு காரணமாக பியூட்டி பார்லர்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.


இதனால் அதை நடத்துபவர்களும், அதில் பணியாற்றுபவர்கள் உள்பட 5 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் நலன் கருதி முதலுதவியாக திருப்பூர் மாவட்டத்தில் பியூட்டி பார்லர்களை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும். மேலும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு 75 சதவீத தள்ளுபடியுடன் கடனுதவி வழங்க வேண்டும்.


தொடர்ந்து 6 மாத காலத்திற்கு தலா ரூ.20 ஆயிரம் நிவாரண தொகையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர், தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.