மின்னல் வேக கலெக்டர் யார்ன்னு தெரியுமா...போக்குவரத்து ஊழியரின் உருக்கமான பதிவு


மதுரை தநாஅபோக பணியாளர்கள் சம்மேளனத்தின் மாநில இணைப் பொதுச் செயலாளர் எஸ்.சம்பத் என்பவரது பேஸ்புக் பதிவு இது.., 

 


#மின்னல்_வேக_ஆட்சித்தலைவர் திருமிகு மருத்துவர்


இ.ஆ.ப.எனது அப்பாவின் 4 வது (கடைசி) சகோதரர் திரு தே.ராமசாமி திருப்பூரில் வசித்து வருகிறார். அவரது மனைவி என் சித்தி திருமதி ஆர்.விஜயம், கோவை மாவட்டம் குளத்துப்புதூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் கடைசியாக தலைமையாசிரியையாக பணியாற்றி 31/12/2007ல் பணி ஓய்வு பெற்றார். அவர்களுக்கு குழந்தைகள் கிடையாது. என் சித்தப்பாவிற்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக இரண்டு கண்களிலும் முழுமையாக பார்வையிழந்து விட்டார். சித்தியின் ஓய்வூதியத்தில் இருவரும் வாழ்ந்து வந்தனர்.இந்நிலையில் கடந்த 25/03/2020 அன்று முன்னதாக சிறிது நோய்வாய்ப் பட்டிருந்த சித்தி திடீரென இறந்து விட்டார். கொரோனா ஊரடங்கு அந்த நேரம் தொடங்கிவிட்டதால் குடும்பரீதியாக செய்ய வேண்டிய திதி போன்றவைகள் கூட 2 மாதங்கள் கழித்துதான் நடத்த முடிந்தது. அவரது வங்கிக் கணக்கில் மருத்துவச் செலவினங்கள் போக மீத மிருந்த சொற்ப தொகையை சித்தப்பா பெயருக்கு மாற்ற வேண்டும், ஓய்வூதித்தை குடும்ப ஓய்வூதியமாக பெற சித்தப்பா விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு இறப்புச் சான்று, வாரிசு சான்று விரைந்து கிடைக்க வேண்டும்.பொதுவாகவே இறந்தவர்களின் இறப்புச் சான்று, வாரிசு சான்றுகள் பெறுவதில் பலர் இயல்பாக சிரமப்படுவதை நான் போக்குவரத்துக் கழகங்களின் ஓய்வூதியப் பிரிவில் கண்காணிப்பாளராக பணியாற்றிய போது கண்டிருக்கிறேன்.என் மற்றொரு சித்தப்பாவின் பையன் உதவியுடன் இறப்புச் சான்று மனுச் செய்ய முயற்சித்தபோது, ஊரடங்கின் காரணமாக மனுவை அலுவலகத்தில் சமர்ப்பிக்கவே இயலாத சூழல் நிலவியது.திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவரைப் பொறுத்தவரை பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதில் மிக விரைந்து செயலாற்றுகிற விபரங்களை செய்திகளின் வாயிலாகவும், அவரின் முகநூல் பதிவு வாயிலாகவும் பார்த்திருக்கிறேன்.அதை மனதில் வைத்துக்கொண்டு சித்தப்பாவின் சூழல், பார்வையின்மை, வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியிருப்பது போன்றவற்றை விவரித்து மாவட்ட ஆட்சித்தலைவரின் முகநூல் பக்கத்தில் உள்ள அவரது தனிப்பட்ட குறுஞ்செய்தி பெட்டியில் ஒரு மனுபோல் மே மாதம் இரண்டாவது வாரம் பதிவு செய்தேன். அதில் எனது பெயர், பணி, தொழிற்சங்க பதவி, கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்றவற்றை குறிப்பிட்டிருந்தேன். பதிவு செய்ததிலிருந்து 3 மணி நேரத்தில் மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் என்னை தொலைபேசியில் அழைத்து மறுநாள் என் சித்தி குடியிருந்த பகுதி முத்தனம்பாளையத்திற்கு தொடர்புடைய நல்லூர் ஊராட்சி அலுவலகத்தில் ஒரு அலுவலர் பெயர் குறிப்பிட்டு அவரிடம் நேரில் சென்று மனுவைக் கொடுக்கச் சொன்னார்.அதன் பிறகு தொடர்ந்து அடிக்கடி மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளருடன் தொடர்பில் இருந்து நினைவூட்ட அவரும் உரிய அலுவலர்களுக்கு தெரிவித்ததில் ஜூன் முதல் வாரத்தில் இறப்புச் சான்று கிடைத்து விட்டது.அதன்பின் வாரிசு சான்று மனுச் செய்யச் சென்ற போது சில நடைமுறைகள் பின்பற்ற வேண்டியது தெரிந்து அதன்படி குடிமைப்பொருள் விநியோக அட்டையில் சித்தியின் பெயரை நீக்க விண்ணப்பம், அதன் பின் முத்தனம்பாளையத்திற்கு தொடர்புடைய கோயில்வழி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் வாரிசுச் சான்றிற்கு மனுச் செய்தோம். VAO - R.I - Tashildar என அந்த கோப்பு பயணப்பட்டு இறுதி ஒப்பம் ஆக வேண்டும்.மற்றவர் ஒருவர் உதவியில்லாமல் எந்தப் பணியும் என் சித்தப்பாவால் மேற்கொள்ள இயலா நிலையினாலும், ஊரடங்கு காரணமாகவும் இறப்பு தகவலை கருவூலத்திற்கு, வங்கிக்கு தெரிவிக்க தாமதம் நேரிட்டது. இருப்பினும் சித்தி இறந்த மறு நிமிடத்திலிருந்து அவரது கணக்கிலிருந்து எந்தத் தொகையும் எடுக்கவில்லை. அவ்வாறு எடுத்தால் அது சட்டவிரோத பணப்பரிமாற்றம், அதற்கு சில நடைமுறைகளை பின்னர் சந்திக்க வேண்டியிருக்கும் என எனது ஓய்வூதியத்துறை அனுபவத்தை தம்பியிடம் தெரிவித்திருந்தேன்.இந்த கொரோனா காலத்தில் வருவாய்த்துறையினரின் கடுமையான பணிச்சுமை குறித்து நான் நன்கறிவேன்.இதே முகநூலில் சில தினங்கள் முன்பாக மதுரை - திருச்சி நான்கு வழி நெடுஞ்சாலையில், வெறும் ஷாமியானா நிழலில் தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் சோதனைச் சாவடியில் வதங்குவதைக் குறித்து எழுதியிருந்தேன். அது போல் மற்ற மாவட்டங்களிலும் அவர்களுக்கு கடுமையான பணியிருக்கும், மறுக்கவில்லை.ஆனால் அதே நேரம் குடும்பத் தலைவர், தலைவியை இழக்கும் குடும்பத்திற்கு இறப்புச் சான்று வாரிசு சான்று போன்றவற்றை இந்த சிரம காலத்திலும் முன்னுரிமை கொடுத்து பணியாற்ற வேண்டிய அவசியம் என்பது இருக்கிறது.ஓய்வூதிய மாற்றம் கோரி மனுச் செய்ய, வங்கிக் கணக்கிலுள்ள சொற்ப தொகையை எடுக்க, இறந்த ஓய்வூதியர் குடும்பத்திற்கு அளிக்கப்படும் குடும்ப நல நிதி விண்ணப்பிக்க அனைத்திற்கும் வாரிசு சான்று தேவை. விண்ணப்பித்து 15 தினங்கள் மேலான நிலையில், இன்று (07/07/2020) காலை 8.15 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவரின் முகநூல் பக்க செய்திப் பெட்டியிலும், நேர்முக உதவியாளர் வாட்ஸ் ஆப் எண்ணிலும் நிலைமைகளை விளக்கி மீண்டும் ஒரு வேண்டுகையை பணிவுடன் சமா்ப்பித்தேன்.சிறிது நேரத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அந்த செய்தியை பார்த்துவிட்டார் என்பது எனது கைபேசியிலிருந்து அறிய முடிந்தது. யாருக்கு என்ன உத்திரவிட்டார் என்பது தெரியாது. ஆனால் மதியம் உணவு இடைவேளையின் போது நேர்முக உதவியாளர் "ஏற்பாடு செய்தாகிவிட்டது, விரைவில் வாரிசு சான்று கிடைத்துவிடும்" என எனக்கு குறுஞ்செய்தி அனுப்பினார். எனது நன்றியை உடனடியாக தெரிவித்தேன். மதியம் 1.50ற்கு வாரிசு சான்று தாசில்தார் ஒப்பம் பெறப்பட்டு 2.40 மணிக்கு எனக்கு புகைப்பட நகலாக நே.மு. உதவியாளர் அனுப்பியிருந்தார்.எனக்கும், என் தம்பிக்கும் கண்ணீர் மல்கியது. திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவரின் மின்னல் வேக நடவடிக்கைக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும். இறந்தவர்கள் குடும்பத்திற்கான உதவி என்பது இதே போல் மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எனது பணிவான வேண்டுகோள்.திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர்

திருமிகு மருத்துவர்.கே.விஜய கார்த்திகேயன், இ.ஆ.ப. அவர்களுக்கு மீண்டும் ஒரு நெஞ்சார்ந்த நன்றியினை எங்கள் ஒட்டுமொத்த குடும்பத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.-எஸ்.சம்பத், மாநில இணைப் பொதுச் செயலாளர், தநாஅபோக பணியாளர்கள் சம்மேளனம், மதுரை