முதல்வரை சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிய முதியவர்... வீடு தேடிச்சென்று உதவிய இன்பதுரை எம்.எல்.ஏ


 

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் புளியந்தோப்பு வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் வயது 70. இந்த தள்ளாத வயதிலும் வாகன காப்பகத்தில் வேலை பார்த்து வரும் சொற்ப தொகையில் கஷ்ட ஜீவனம் நடத்திவரும் முதியவர் ஆறுமுகம் அரசு வழங்கும்  முதியோர் உதவித் தொகையை தனக்கு வழங்க வேண்டும் என பல முறை  அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை  அரசு வழங்கும் எந்த உதவியும் கிடைக்கவில்லையாம்.

 

இந்த நிலையில்  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நெல்லை வந்திருப்பதை அறிந்த ஆறுமுகம் கொடிய வறுமையில் வாடும் தனக்கு முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும் என கோரி முதல்வரிடம்  மனு கொடுப்பதற்காக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு  வந்திருந்தார். ஆனால் அங்கிருந்த பாதுகாப்பு போலீசார் ஆட்சியர் அலுவலகத்தினுள் செல்ல அவரை அனுமதிக்கவில்லை. எனவே முதியவர் ஆறுமுகம் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார். இந்த தகவல் வாட்ஸ் அப் −பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இது குறித்து அறிந்த ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை பத்திரிகையாளர்கள் மூலம் மீனாட்சிபுரத்தில் உள்ள அந்த முதியவரின் இல்லத்தை தேடிக் கண்டுபிடித்து  அவரது வீட்டிற்கு தானே நேரில் சென்று அவரது குடும்பத்திற்கு இரண்டு மாதங்களுக்கு தேவையான அரிசி, மளிகை பொருள் மற்றும் சிறிய உதவி தொகையை வழங்கினார்.

வீடு தேடி வந்து உதவிகள் செய்த இன்பதுரை எம்எல்ஏவுக்கு முதியவர்  ஆறுமுகம் மனதார நன்றி கூறினார்.