நல்லம்மன் தடுப்பணையில் புதுவெள்ளம்: சிறுமியின் தியாகத்தை குளிர்விக்கும் நொய்யல்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டு உள்ளது. இதனால் திருப்பூர் அருகில் மங்கலம் பகுதியில் உள்ள நல்லம்மன் தடுப்பணையில் புதுவெள்ளம் பொங்கிப்பாய்கிறது. அணை நடுவில் உள்ள நல்லம்மன் கோவில் மூழ்கி உள்ளது. 


வீடியோ இதோ:



 


 



காவிரி ஆற்றின் துணை ஆறான நொய்யல் ஆறு கோவைக்கு மேற்கில் பூண்டி, சிறுவாணி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மேற்குத்தொடர்ச்சிமலைப்பகுதிகளில் உற்ப்பத்தி ஆகிறது. இந்த ஆறு கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 165 கி.மீ., தூரம் பயணித்து, கரூர் மாவட்டத்தில் காவிரியில் கலக்கிறது. 1100 ஆண்டுகளுக்கு முன்னர் கொங்கு சோழர்கள் காலத்தில் நொய்யல் ஆற்றில் சிறப்பான பாசனத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்தது. ஆற்றில் வரும் தண்ணீர் தடுப்பணைகளில் தடுக்கப்பட்டு, ஒரு குளம் நிறைந்த பிறகு அடுத்த குளத்துக்கு செல்லும் வண்ணம் தடுப்பணைகளையும், குளங்களையும் அமைத்து இருந்தனர் கொங்கு சோழர்கள்.


அவ்வாறு ஆற்றில் வரும் தண்ணீரானது, 15 க்கும் மேற்ப்பட்ட குளங்களுக்கு அனுப்பப்பட்டு பாசனத்துக்கு பயன்படுத்தப்பட்டது.  இப்படி, திருப்பூர் பகுதியில் நொய்யல் ஆறு நுழையுமிடமான மங்கலம் பகுதியில் அமைந்து உள்ளது தான் நல்லம்மன் தடுப்பணை. சுமார் 1000 அடி நீளமும், 20 அடி உயரமும் உள்ள இந்த இந்த தடுப்பணை கட்டி 1100 ஆண்டுகள் ஆகியும் கம்பீரமான நிற்கிறது. 


நல்லம்மன் தடுப்பணை கட்டும்போது, அணை நடுவில் உள்ள இடத்தில் தண்ணீர் வரத்தால் உடைந்து கொண்டே இருந்ததாகவும், அந்த இடத்தில் சிறுமி நல்லம்மாளின் உயிர்த்தியாகத்தால் அணை உடைவது நின்று கட்டுமானம் நிறைவடைந்தது எனவும் செவிவழி செய்தியாக கூறுகிறார்கள். அணை நடுவில் அந்த சிறுமியின் நினைவாக கோவில் கட்டி வழிபாடும் நடத்தி வருகிறார்கள். இன்றளவும் ஆண்டுக்கொருமுறை நல்லம்மனுக்கு பொங்கல் வைத்து  படையல் வழிபாடு செய்யப்பட்டும் வருகிறது.


 தற்போது நொய்யல் ஆற்றில் ஏற்ப்பட்டு உள்ள வெள்ளப்பெருக்கால், திருப்பூரை அடுத்த மங்கலம் பகுதியில் நொய்யல் ஆற்றில் உள்ள நல்லம்மன் தடுப்பணையில் புது வெள்ளம் பொங்கி வழிகிறது. 1000 அடி நீளத்தும் ரம்மியமாய் நுங்கும் நுரையுமாக இந்த புது வெள்ளம் பாய்வதை ஏராளமானவர்கள் கண்டு களித்து செல்கின்றனர். மேலும் ஆற்றுவெள்ளம் காரணமாக தடுப்பணை நடுவில் உள்ள நல்லம்மன் கோவிலை நீர் சூழ்ந்து, கோவில் மூழ்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் கோவிலுக்கு செல்ல முடியாமல் திரும்பி செல்கின்றனர். ஆனாலும், ஆற்றில் புதுவெள்ளம் பாய்வதை பொதுமக்கள் திரண்டு ரசிப்பதையும் காணமுடிகிறது. 


 


Previous Post Next Post