இடிந்து விழும் நிலையில் வீடுகள்... உத்திரத்தில் கம்புகளை முட்டுக்கொடுத்து வாழும் அவலம்... மலைகிராம மக்களின் பரிதாப நிலை

தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதி கொட்டகுடி ஊராட்சிக் குட்பட்ட  மலைகிராம  பகுதியில் வாழும் முதுவாக்குடி பழங்குடியினர் மற்றும் பளியர் இன மக்கள் மற்றும் விவசாயிகள் என அனைவரும் மாவட்ட  வனத்துறையின் மூலம் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் இந்த வேளையில் இயற்கை பேரிடர்க்கும் பயந்து வாழ வேண்டிய சூழ்நிலையாக உள்ளது.

 


 

கொட்டகுடி கிராமத்துக்கு உட்பட்ட மலை பகுதியில் சுமார் 8 க்கும் மேற்பட்ட கிராமங்களும் 1500 க்கு மேல் ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் முதியவர்கள் வசிக்கின்றனர். விவசாய மற்றும் கூலி வேலைக்கு சுமார் 1000 பேருக்கு மேலும் சென்று வரக்கூடிய பகுதியாகும் சுமார் 25 வீடுகளுக்கு மேல் உள்ள பழங்குடியினர் வாழும் முதுவாகுடி பகுதியில் அரசு 10 ஆண்டுகளுக்கு முன் கட்டிக்கொடுத்த அனைத்து வீடுகளும் பலத்த சேதம் அடைந்துள்ளதால் முதுவாக்குடி சேர்ந்த பழங்குடி மக்கள் பெரும் பீதியோடு வாழ்கிறார்கள்.

 

மழை பெய்யும் இந்த நேரத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள ஒவ்வொரு வீட்டின் உத்திரத்தில் கம்புகளை முட்டுக்கொடுத்து உள்ளனர். எப்பொழுது வேண்டுமென்றாலும் இடிந்துவிழும் சூழ்நிலையில் உள்ள இந்த வீடுகளை மாற்றி தரக்கோரி பலமுறை அரசுக்கு தெரியப் படுத்தியும் கண்டுகொள்ளாமல் இருப்பது பழங்குடியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 


 

தற்போது அரசு கட்டிக்கொடுத்த அனைத்து வீடுகளும் இடிந்து விழும். நிலையில் உள்ளது மழை பெய்து வருவதால் வீடுகளில் மழை நீர் ஒழுகி வீட்டுக்குள்ளேயே தங்கியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குழந்தைகளையும் நோயாளிகளையும் பாதுகாக்கவே பெரும் வேலையாக இருக்கிறது. 

 

பல ஆண்டுகளை கடந்த பழங்குடி மக்கள் வழிபாடு செய்துவந்த ஆலமரம் ஒன்று பலத்த காற்றினால் சாய்ந்து கோயில் மீது விழுந்து விட்டது. இது அந்த மக்களிடம் ஏதோ தங்களுக்கு பேராபத்து வரப்போகிறது என பீதியை கிளப்பியுள்ளது .சிறை காடு பகுதியில் வாழும் பளியர் இன மக்கள் வீடுகள் இடிந்து விடும் உள்ளநிலையில் போடி நகராட்சியில் குப்பை காட்டில் குடியிருந்து வருகின்றனர்.

 


 

பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு  தங்களை பாதுகாத்துக் கொள்ள பெரும்பாடு படுகிறார்கள் குடிநீர் கூட இல்லாத இந்த நேரத்தில் மின்சாரமும் இல்லாதது பகுதி மக்களுக்கு பெரும் துயரமாக உள்ளது.

 

தேர்தல் நேரத்தில் மட்டும் ஓட்டுப் பெட்டியை தலையில் தூக்கிக் கொண்டும்  குதிரையில் ஏற்றிக் கொண்டும் அக்கறையோடு பலத்த பாதுகாப்போடு அந்த மக்களை மலைப் பகுதியில்  சென்று சந்திக்கும் மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் இணைந்து போர்க்கால நடவடிக்கையாக அவர்களது வீடுகளை செப்பனிட்டு தருமாறு சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.