திண்டுக்கல் அருகே  கேட்பாரற்று கிடந்த 14 நாட்டுத் துப்பாக்கிகள்...  போலீசார் விசாரணை


திண்டுக்கல் பகுதிகளில் நாட்டுத் துப்பாக்கிகள் தயாரிப்பதாக  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியாவுக்கு தகவல்கள் கிடைத்தது. இதனை அடுத்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட உத்தரவிட்டார்.

 

அதன்படி, புறநகர் டி.எஸ்.பி வினோத் தலைமையில் போலீசார் சிறுமலை, தவசிமடை உள்ளிட்ட  பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தவசிமடை கிராம நிர்வாக அலுவலர் திருவருட்செல்வம்,   தவசிமடை   கருந்தண்ணி நீரோடை அருகே கேட்பாரற்று நாட்டுத் துப்பாக்கிகள் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் அளித்தார்.

 

அதன் அடிப்படையில் சாணார்பட்டி போலீசார் சம்பவ இடம் விரைந்து  சென்றனர்.  அப்போது அங்கிருந்த நாட்டு துப்பாக்கிகள் கிடப்பது தெரியவந்தது.   இதனையடுத்து கேட்பாரற்று கிடந்த 14 நாட்டு துப்பாக்கிகளைபறிமுதல் செய்தனர்.

 

இச்சம்பவம் குறித்து சாணார்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சாணார்பட்டி அருகே நொச்சிச்சியோடைப்பட்டியில்   நாட்டுத் துப்பாக்கிகள் தயாரித்த  பரதன் என்பவரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.