மனித நேயத்திற்கு மரியாதை செய்த திருநெல்வேலி மாநகர காவல்துறை... வியப்பில் ஆழ்த்திய காவல் துணை ஆணையரின் நடவடிக்கை


 

நெல்லை வண்ணார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் வயது 24 இவர் லேப்டாப் சர்வீஸ் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். 

 

சம்பவத்தன்று  சுமார் இரவு 10.30 மணி அளவில் வேலையை முடித்துக்கொண்டு மணிகண்டன் தனது மோட்டார் சைக்கிளில் வண்ணார்பேட்டை பகுதியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வண்ணார்பேட்டை ரவுண்டானா பகுதியில் சென்றபோது அங்கு சாலையோரம் சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் தன்னை ஏற்றிச் செல்லுமாறு கூறிக்கொண்டிருந்தார். இதனை காமெடிதான் மணிகண்டன் அந்த மூதாட்டியை அந்த மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு நெல்லை டவுனில் உள்ள அவரது வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

 

டவுன் பொருட்காட்சி அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கு வாகன சோதனை ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசார் ஹெல்மெட் அணியாமல் சென்ற மணிகண்டன் வாகனத்தை நிறுத்தி அவருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

 

அப்போது மணிகண்டன். இரவு நேரத்தில் வீடு திரும்ப முடியாமல் தவித்த   மூதாட்டிக்கு உதவி செய்வதற்காக சென்று கொண்டிருக்கிறேன் என போலீசாரிடம் கூறினார். எனினும் போலீசார் அவருக்கு அபராதம் விதித்ததால் மன உளைச்சலுக்கு உள்ளான மணிகண்டன்  தனது சமூக வலைதள பக்கத்தில் உதவி செய்ய சென்ற எனக்கு காவல்துறையினர் அபராதம் விதித்து விட்டார்கள் என வேதனையுடன் பதிவு செய்திருந்தார்.

 

இதுகுறித்து அறிந்த நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் சரவணன் வயது முதிர்ந்த மூதாட்டி உதவி செய்யும் நோக்கில் சென்ற  வாலிபர் மணிகண்டனுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய முடிவு செய்தார். 

துணை ஆணையர் சரவணன் ஆலோசனையின் பெயரில் மறுநாள் காலையில் நெல்லை டவுன் காவல் உதவி ஆணையர் சதீஷ்குமார் தனது அலுவலகத்திற்கு வாலிபர் மணிகண்டனை நேரில் வரவழைத்து இனிமேல் வாகனங்களில் செல்லும்போது ஹெல்மெட் அணியாமல் செல்லக்கூடாது எனக் கூறி அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்வதாக கூறினார்.

 

அபராத தொகை விதிக்கப்பட்டதால் மன உளைச்சலுக்கு உள்ளான வாலிபருக்கு மனிதநேயத்தை போற்றும் வகையில் நெல்லை மாநகர  காவல்துறையின் நடவடிக்கை பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியது.