அனைவருக்கும் கல்வி என்ற நிலையை அடைய திமுகதான் காரணம் -திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்

அனைவருக்கும் கல்வி என்ற நிலையை அடைய திமுகதான் காரணம் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.



திமுக பொதுச் செயலாளராக துரைமுருகன் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக வேலூருக்கு இன்று (செப். 17) வந்தார். முன்னதாக, ராணிப்பேட்டை மாவட்ட எல்லையில் திமுக மாவட்ட செயலாளர் ஆர்.காந்தி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் துரைமுருகன் பேசும்போது, "நான் ராணிப்பேட்டை எம்எல்ஏவாக ஆன பிறகுதான் தமிழ்நாட்டுக்கே என்னைத் தெரியும். காரணம், எம்ஜிஆர் ஒரு மரத்தைக் காட்டி இவருக்கு ஓட்டு போடு என்றால் மக்கள் ஓட்டு போட்ட காலம் அது. அப்போதே என்னை 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராணிப்பேட்டையில் ஜெயிக்க வைத்தீர்கள்.


திமுக உருவாக்கப்பட்ட காலத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் அதிகளவில் கல்வி பயின்று வந்த நிலையில் அனைவருக்கும் கல்வி என்ற நிலையை அடைய திமுகதான் காரணம்" என்றார்.


தொடர்ந்து, வேலூர் மாவட்ட எல்லையான பிள்ளையார்குப்பத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் வேலூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ஏ.பி.நந்தகுமார் தலைமையில் அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


வேலூர் மத்திய மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் துரைமுருகன் பேசும்போது, "திமுகவை உருவாக்கிய அண்ணா, நெடுஞ்செழியன், க.அன்பழகன் வகித்த பதவியில், ஒரு தொண்டனாக அவர்களின் பேச்சை கேட்டு வந்தவன் முதன்முறையாக அமர்ந்துள்ளேன். இது மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சியாக உள்ளது.


சட்டப்பேரவையில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தைப் பிரிப்பது குறித்து முதல்வர் சரியாக பதில் சொல்லவில்லை. நேரடியாக இரண்டாக பிரிப்பதாக கூறியதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். அதிக மாவட்டங்கள் இருப்பதால் தனியாக பிரித்து விழுப்புரம், கடலூருக்கு பல்கலைக்கழகம் அமைக்க உள்ளோம் என முதல்வர் கூறியிருக்க வேண்டும். தனியாக பல்கலைக்கழகம் தொடங்குவதில் எங்களுக்கு ஆட்சேபம் இல்லை. எந்தப் பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்" என்று தெரிவித்தார்.


அப்போது, வேலூர் தொகுதி திமுக எம்.பி. கதிர் ஆனந்த், மத்திய மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார், வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Previous Post Next Post