திருச்செந்தூரில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்.!


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திருச்செந்தூர் பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், பேசியதாவது:

திருச்செந்தூர் பேரூராட்சிக்கென குரங்கணி அருகில் தாமிரபரணி ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டு வரும் தனி குடிநீர் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் தினசரி 2.10 எம்எல்டி நீர் திருச்செந்தூருக்கு வழங்கப்பட்டு வருகிறது. 

கூடுதலாக இப்பகுதியில் இருந்து 3 எம்எல்டி குடிநீர் எடுக்கும் வகையில் புதிய குடிநீர் திட்ட வரைவு ஒன்று தயார் செய்ய வேண்டும். மேலும் திருச்செந்தூர் பேரூராட்சி பகுதியில் உள்ள 11000 வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தற்போது 7000,குடியிருப்புகளுக்கு மட்டுமே குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் திருச்செந்தூரில் செயல்படுத்தப்பட்டு வரும் பாதாளசாக்கடை திட்டத்தில் குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களையும் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

திருச்செந்தூர் பகுதியில் பெறப்படும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை கிடங்கிற்கு கொண்டு செல்ல 10 வாகனங்கள் வாங்கிட கருத்துருக்களை உடனடியாக அனுப்பி  வைக்க வேண்டும். திருச்செந்தூர் பேரூராட்சி பகுதியை தூய்மையாக பராமரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

மேலும் திருச்செந்தூர் பேரூராட்சியில் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து திட்ட வரைவுகளை தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்தார். 

கூட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் கோகிலா, பேரூராட்சிகள் மண்டல உதவி இயக்குநர் சேதுராமன், செயற்பொறியாளர் ஜெகதீஸ்வரி, உதவி செயற்பொறியாளர் வாசுதேவன், ஏரல் வட்டாட்சியர் இசக்கிராஜ் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post