இனாம் மணியாச்சியில் புதிய நியாய விலைக்கடை - அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார் அதிமுக எம்.எல்.ஏ. கடம்பூர் ராஜூ பங்கேற்பு.!


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியையடுத்த இனாம் மணியாச்சி ஊராட்சிக்கு உள்பட்ட கிருஷ்ணா நகரில் கனிமம் மற்றும் சுரங்கம் நிதி 2019 - 2020ஆம் ஆண்டு திட்டத்தின் கீழ் ரூ.10.35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக்கடை திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது. 

கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ.ராஜு முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் கலந்து கொண்டு நியாய விலைக்கடையை திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசின் 14 பொருள்கள் அடங்கிய விலையில்லா தொகுப்பை வழங்கினார்.

நிகழ்ச்சியில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர் ரேவதி, கோட்டாட்சியர் சங்கரநாராயணன், வட்டாட்சியர் அமுதா, மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம், வட்ட வழங்கல் அலுவலர் செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.