பாஜக மீதான பாலியல் புகார்கள் - காவல்துறை நடவடிக்கை தேவை - தமிழக அரசுக்கு சிபிஐஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள்.!


பாஜக மீதான பாலியல் புகார்கள் குறித்து காவல்துறை நடவடிக்கை தேவை எனவும், பாஜக தலைவர் அண்ணாமலையின் அறிக்கை நடந்துள்ள பாலியல் குற்றங்களை உறுதி செய்வது போல் இருக்கிறது, ஆகவே குற்றம் சாட்டப்பட்டவர்களையும், உடந்தையாக இருந்தவர்களையும் கைது செய்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என சிபிஐஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ...

"தமிழக பாஜக தலைமையின் மீது எழுந்துள்ள பாலியல் புகார்களும், அடுத்தடுத்து வரும் செய்திகளும் அதிர்ச்சி தருகிறது. மனித மாண்புகளையே கேள்விக்குள்ளாக்குகிறது.

பாஜகவின் பொதுச் செயலாளர் கே.டி.ராகவன், ஏதோ பெருந்தன்மையானவர் போல ராஜினாமா செய்திருக்கிறார். இவ்விசயத்தில் ராஜினாமா மட்டும் தீர்வாகாது, அவர் சட்டத்திற்கு முன் பதில் சொல்லியாக வேண்டும்.

இதுபற்றி, பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருக்கும் அறிக்கை நடந்துள்ள குற்றங்களை உறுதி செய்வது போல் இருப்பதுடன், மேலும் பல புகார்கள் விசாரிக்கப்படாமல் இருப்பதாக காட்டுகின்றன.

இது குறித்து தனக்கு தெரியும் என்றபோதிலும் நடவடிக்கையை தாமதப்படுத்தியதை வெளிப்படையாக கூறுகிறார். மேலும், திருமதி மலர்க்கொடி என்பவரைக் கொண்டு புகார்களை விசாரிக்க இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

பாஜகவின் தலைமையில் நடந்துவரும் பாலியல் குற்றங்களை 'விசாகா குழு' விசாரிக்கவுள்ளதாக சில மாதங்கள் முன்னரே தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. ஆனால் அதற்கு கடுமையான எதிர்ப்பினை பாஜக தெரிவித்ததுடன், செய்தியும் நீக்கப்பட்டது.

இப்போது  பாலியல் குற்றங்கள் நடந்திருப்பது பாஜகவைச் சேர்ந்த ஒருவராலேயே வெளிப்படுத்தப் பட்டுள்ளது. எனவே, இப்பிரச்சனையில் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகள் தெளிவாகவே தெரிகின்றன.

ஊடகங்களில் எழுதப்படும் வேறு பல செய்திகளைப் படித்தால், பாஜகவில் பெண்களுக்கு எதிராக  பாலியல் சுரண்டல்களும், அராஜகங்களும் நடந்திருப்பது அப்பட்டமாகிறது.

இத்தகைய அவலம், பொது வாழ்க்கைக்கு வரும் பெண்கள் அனைவருக்கும் எதிரான கடுமையான குற்றமே ஆகும். இதுபோன்ற அவலங்களை கடுமையான முறையில் கையாண்டால்தான், அரசியல் மீதான நம்பிக்கையை பெண்களுக்கும், பொது மக்களுக்கும் ஏற்படுத்த முடியும்.

எனவே, இவ்விவகாரத்தை மூடி மறைக்க முயன்ற பாஜக தலைவர் அண்ணாமலை, புகாருக்கு ஆளான பொதுச் செயலாளரும் வழக்கறிஞருமான ராகவன் உட்பட பத்துக்கும் அதிகமானவர்கள் போன்றவர்கள் அதிகாரம் மிக்க பதவிகளில் உள்ளவர்கள். எனவே, பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் தைரியமாக முன்வந்து பேச வேண்டுமென்றால், காவல்துறையின் தலையீடு அவசியமாகும். எனவே, இந்த பிரச்சனையை குற்ற வழக்காக பதிவு செய்ய வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்களையும், உடந்தையாக இருந்தவர்களையும் கைது செய்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்" என கூறியுள்ளார்.

Previous Post Next Post