உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற தேர்தலில் கண்ட தோல்வியை நிவர்த்தி செய்வோம்- முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ.!


தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் 7- போக்குவரத்து பிரிவு பணிமனைகளில் உள்ள அண்ணா தொழிற்சங்க பேரவை நிர்வாகிகளுக்கான தேர்தல் வருகிற 15- ஆம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பணி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக அலுவலத்தில் வைத்து மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன்,முன்னாள் அமைச்சரும்,கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,தெற்கு மாவட்ட செயலாளர் S.P.சண்முகநாதன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ "தமிழகத்தில் ஆட்சி அமைத்திருக்கக்கூடிய திமுக 100-நாட்களை கடந்துள்ள நிலையில் தேர்தலின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளான நீட் தேர்வு ரத்து, பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைப்பு போன்ற மக்களுக்கு அளித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.

நீட் தேர்வு வேண்டாம் என்பதே அதிமுக அரசின் கொள்கை முடிவாக இருந்தது. நடைபெற இருக்கும் 9-மாவாட்டத்தின் உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று சட்டமன்ற தேர்தலில் கண்ட தோல்வியை நிவர்த்தி செய்வோம் என்றார். தொடர்ந்து வேட்புமனு பணிகள் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல்,மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர்,வழக்கறிஞர் அணி செயலாளர் சேகர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்