தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் - 1971 வழக்குகளுக்கு ஒரே நாளில் தீர்வு.!


தூத்துக்குடி மாவட்டத்தில்  நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) மூலமாக 3492 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு 1971 வழக்குகளுக்கு நேற்று ஒரே நாளில்  தீர்வு காணப்பட்டுள்ளது, 

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி V.தங்கமாரியப்பன், தலைமையில்  தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. 

இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடியில் 6 அமர்வுகளும், கோவில்பட்டியில் 2 அமர்வுகளும், திருச்செந்தூரில் 2 அமர்வுகளும், விளாத்திகுளம், சாத்தான்குளம் மற்றும் திருவைகுண்டத்தில் தலா ஒரு அமர்வு உட்பட ஆக மொத்தம் 13 அமர்வுகளில்    சமாதானமாக செல்லக் கூடிய குற்றவியல் வழக்குகள்,  அனைத்து வகையான சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், மணவாழ்க்கை சம்மந்தப்பட்ட வழக்குகள், வங்கி கடன் வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. 

மேற்படி தேசிய மக்கள் நீதிமன்றத்தில்  நீதிபதிகள் மற்றும் காப்பீடு நிறுவன மேலாளர்கள், வங்கி மேலாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், காவல் துறையினர், வழக்காடிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட வழக்குகளில் வங்கி வாராக்கடன் வழக்குகளில் 1217 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு 223 வழக்குகள் தீர்வு காணப்பட்டது. அதன் மொத்த தீர்வு தொகை ரூ.1,76,85,925/-. மேலும்  நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 2275 வழக்குகளில் ரூ.1,92,28,556/- மதிப்புள்ள 1748 வழக்குகள் தீர்வு காணப்பட்டது. ஆக மொத்தம் 3492 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு 1971 வழக்குகள் தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டது. அதன் மொத்த தீர்வு தொகை ரூ.3,69,14,481/- (ரூபாய். மூன்று கோடியே அறுபத்தி ஒன்பது லட்சத்து பதினான்காயிரத்தி நானுற்றி எண்பத்தி ஒன்று ). 

தூத்துக்குடி மாவட்டத்தில்,தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் / சார்பு நீதிபதி, M.பீரித்தா, செய்திருந்தார்.