வாணியம்பாடி மஜக பிரமுகர் கொலை - இதுபோன்ற சம்பவங்களை இந்த அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் - சட்டசபையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி


திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரில் சமூகநல ஆர்வலரான மஜக பிரமுகர் வசீம் அக்ரம் தொழுகை முடிந்து வீடு திரும்பிய போது, 6 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டிக் கொன்று தலையைத் துண்டித்துச் சென்றது. இது குறித்து சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார், கஞ்சா விற்பனை குறித்த தகவல் தந்த மஜக நிர்வாகி கொல்லப்பட்டுள்ளார் என்றும் கொலை செய்தவர்களைக் கண்டுபிடித்து கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார்.


வாணியம்பாடி பகுதியில் நடைபெற்ற கொலை சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அளித்த பதில்


எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு பிரச்சினைகளை இந்த அவையிலே கிளப்பி, அவற்றின் நிலை என்ன என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள்.  வாணியம்பாடி பகுதியில் நடைபெற்ற அந்தச் சம்பவத்தைப் பற்றி அவர் சொல்கிறபோது, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சொல்லிவிட்டு, சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்ற அந்தச் செய்தியையும் சொல்லி, அவர் இங்கே ஒப்புதல் தந்திருக்கிறார்.  (மேசையைத் தட்டும் ஒலி) எனவே, அதுகுறித்து நான் விளக்கிச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

    

கடந்த 26-7-2021 அன்று, வாணியம்பாடி ஜீவா நகரைச் சார்ந்த இம்தியாஸ் என்பவருக்குச் சொந்தமான கிடங்கில் கஞ்சா இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, காவல் துறையினர் ரெய்டு செய்திருக்கிறார்கள்.  அதில் 9 கிலோ கஞ்சா, மூன்று கத்திகள், 10 கைபேசிகள் ஆகியவற்றைக் கைப்பற்றி, பைசல் உள்ளிட்ட மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.  கஞ்சா குறித்த தகவலை வசீம் அக்ரம்தான் காவல் துறையினருக்குக் கூறியது என்று இம்தியாஸ் கருதியுள்ளார்.  இந்நிலையில், 10-9-2021 அன்று மாலை சுமார் 6-30 மணியளவில் வசீம் அக்ரமை வழிமறித்து, அரிவாளால் வெட்டியதால், அதே இடத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.  இந்தக் கொலை வழக்கில் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரைச் சார்ந்த பிரசாத் மற்றும் மண்ணிவாக்கத்தைச் சார்ந்த டெல்லி குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.  வாணியம்பாடி பகுதியில் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.  இதுபோன்ற சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு இந்த அரசு ஒடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்,என்றார்.

Previous Post Next Post