எடப்பாடி கொடுத்த செக் பணமில்லாததால் ரிட்டர்ன் !! - பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினர் புகார் !!


எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் நடைபெற்ற அதிமுக ஆட்சியில் விருதுநகர் மாவட்டம் சிப்பிப் பாறை பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட இழப்பீடு தொகைக்கான காசோலை, வங்கியில் பணமில்லாமல் திரும்பி வந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக இன்று 'தூத்துக்குடி பிரஸ் கிளப்'பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சார்பில் பத்திரிகையாளர்களை சந்தித்த கைவினைஞர் முன்னேற்ற கட்சியின் தலைவர் பாலு கூறுகையில்

"விருதுநகர் மாவட்டம் சிப்பிபாறை கிராமத்தில் ராஜம்மாள் பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதி ஏற்பட்ட விபத்தில் 14 பேர் பலியானார்கள் இதில் நான்கு பேர் தூத்துக்குடி மாவட்டம் முக்குட்டுமலை என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் இதுபோல் விருதுநகர் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்களும் பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில் பலியான 14 பேரின் குடும்பத்தாருக்கு 4 லட்ச ரூபாய் நிவாரணத் தொகையாக இழப்பீடு வழங்கப்படும் எனவும் தமிழக அரசு சார்பாக ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் எனவும் அப்போதைய அதிமுக அரசு தெரிவித்தது. 

இதைத்தொடர்ந்து அப்போதைய வெம்பக்கோட்டை வட்டாட்சியர் மூலமாக முதலில் 2 லட்ச ரூபாய்க்கான காசோலையும் இதைத்தொடர்ந்து மற்றும் 2 லட்ச ரூபாய்க்கான காசோலை என நான்கு லட்ச ரூபாய்க்கான காசோலை பாதிக்கப்பட்ட 14 குடும்பத்தினரிடமும் வழங்கப்பட்டது.

இந்த காசோலைகளை மூன்று மாதத்திற்கு பிறகு வங்கியில் செலுத்தும் படி கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது இதைத் தொடர்ந்து மூன்று மாதத்திற்கு பிறகு பாதிக்கப்பட்ட மக்கள் வங்கியின் காசோலையை செலுத்தியபோது அந்த வங்கி கணக்கில் பணம் இல்லை என காசோலைகள் திரும்பி வந்துள்ளன. 

இதுகுறித்து அப்போதைய இருந்த விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்டோரிடம் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் தெரிவித்தனர், யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும் இது குறித்து அப்போதைய ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி இடமும் இந்த குடும்பத்தினர் முறையிட்டுள்ளனர் ஆனால் அவரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

மேலும் அரசு சார்பில் ஒரு லட்ச ரூபாய் நிதி அளிக்கப்படும் என அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார் ஆனால் அந்த தொகையும் இவர்களுக்கு வழங்கப்படவில்லை. 

இதுகுறித்து பலமுறை அரசு அதிகாரிகள் அப்போதைய அதிமுக அமைச்சர்கள் இடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பத்தார் குற்றம்சாட்டியுள்ளனர்.

தங்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு தொகைக்கான காசோலை பணமில்லாமல் திரும்பி வந்து விட்டதாகவும் அதுபோல் அரசு வேலை வழங்கப்படும் என அப்போதைய அதிமுக அரசு தெரிவித்ததாகவும் அதையும் வழங்கவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு வழங்கப்பட்ட சிறு இழப்பீடு தொகை கூட பணமில்லாமல் திரும்பி வந்தது, முந்தைய அரசில் நடைபெற்ற மோசடியை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டியுள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இழப்பீடு மற்றும் வேலை வழங்குவதாக தெரிவித்து பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேட்டியின்போது கைவினைஞர் முன்னேற்றக் கட்சி மாவட்ட தலைவர் பாலு,பொது செயலாளர் பொன்.கனகராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பாதிக்கப்பட்டோர் ஆகியோர் உடனிருந்தனர்.