ஒரு கோடி மதிப்புள்ள முந்திரி பருப்பு கடத்தல் - முன்னாள் அதிமுக அமைச்சர் மகன் உட்பட 7 பேர் கைது


வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்காக முந்திரி பருப்பு ஏற்றி வந்த சுமார் ரூபாய் ஒரு கோடி பத்து லட்சம் மதிப்புள்ள கண்டெய்னர் லாரியை ஆயுதங்களை காட்டி மிரட்டி கடத்தியதாக முன்னாள் அதிமுக அமைச்சர் சி.த செல்லப்பாண்டியனின் மகன் உட்பட 7 பேரை தூத்துக்குடி போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மூலம் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து முந்திரி கொட்டைகள் கண்டெய்னர் லாரியில் கொண்டு வரப்பட்டது. இந்த லாரியை ஆலங்குளத்தைச் சேர்ந்த ஹரி என்பவர் ஓட்டி வந்தார். பொட்டாலூரணி விலக்கு அருகே இந்த லாரியை, காரில் வந்த 7பேர் கொண்ட கும்பல், மறித்து டிரைவரை ஆயுதங்களைக் காட்டி மிரட்டி லாரியை கடத்திச் சென்றுள்ளனர். 

இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரமேஷ், ரூரல் ஏஎஸ்பி சந்தீஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அனைத்துச் சோதனை சாவடிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த லாரியை மடக்கி பிடித்தனர். மேலும், பின்னால் காரில் வந்த 7பேரை பிடித்து விசாரணை நடத்தினர். 


விசாரணையில் தூத்துக்குடி அன்னை தெரசா நகரைச் சேர்ந்த சித செல்லப்பாண்டியன் மகன் ஜெயசிங் (45), எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த கணபதி மகன் மாரிமுத்து (30), முறப்பநாடு கணபதி கோவில் தெருவைச் சேர்ந்த வேலு மகன் செந்தில் முருகன் (33), முள்ளக்காடு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சேகர் மகன் மனோகரன் (35), பிரையனட் நகர் 12வதுதெருவைச் சேர்ந்த சக்தி மகன் விஷ்னு (25), முறப்பநாட்டைச் சேர்ந்த முனியசாமி மகன் பாண்டி (20), நெல்லை சமாதான புரத்தைச் சேர்ந்த சுரேஷ் கிருஷ்ணன் மகன் ராஜ்குமார் (26) ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். 


கடத்தப்பட்ட முந்திரி மதிப்பு ரூ.1கோடியே 10 லட்சம் ஆகும். கைது செய்யப்பட்டுள்ள ஜெபசிங், தூத்துக்குடி முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியனின் மகன் ஆவார். 


ஜெயலலிதா அமைச்சரவையில் தொழிலாளர்நலத் துறை அமைச்சராக இருந்தவர், சி.த.செல்லப்பாண்டியன். தூத்துக்குடி அதிமுகவிலும் முக்கியப் புள்ளி. இவரது 2-வது மகன் ஜெபசிங் ஒரு பெண்ணோடு நெருக்கமாக இருக்கும் வீடியோ சில ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்துதான் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார் செல்லப்பாண்டியன்.


தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் என இரட்டைத் தலைமை வந்தபோது, இவரிடம் இருந்த ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது. இதனால், அதிருப்தியில் இருந்த இவரை சமாதானப்படுத்தும் வகையில் கடந்த ஆட்சியின் இறுதியில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத் தலைவர் பதவியில் அமர்த்தினார்கள்.


இந்நிலையில், ஏற்கெனவே தான் சம்பந்தப்பட்ட வீடியோ வைரல் ஆனதாலேயே அப்பாவின் அமைச்சர் பதவியை பறிக்கவைத்த ஜெபசிங், இப்போது இன்னொரு சிக்கலிலும் செல்லப்பாண்டியனை இழுத்துவிட்டிருக்கிறார்.


இந்த சம்பவம் அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட 7 பேரையும் தூத்துக்குடி அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். தூத்துக்குடியில் ரூ.1.15 கோடி மதிப்புள்ள முந்திரி, லாரியுடன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post Next Post