அதிக லஞ்ச வழக்குகள் பதிவு.! : வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை முன்னணி - தைரியமாக புகாரளிக்க வேண்டுகோள்.!

 

இரண்டு மிகப்பெரிய வழக்குகள் ஒட்டு மொத்த தமிழ்நாட்டின் கவனத்தையும் வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறை பக்கம் திருப்பி சபாஷ் போட வைத்தது அதன் ஹைலைட்ஸ். தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையில் அதிக வழக்குகளை பதிவு செய்து வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக  முன்னணியில் உள்ளது.

தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை, வடக்கு, மேற்கு, மத்திய, தெற்கு மண்டலங் களுடன், சிறப்பு பிரிவு ஒன்றும் என இயங்கி வருகிறது. இதில், வடக்கு மண்டலத்தில் இடம் பெற்றுள்ள வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 

கடந்த 2018-ம் ஆண்டில் 13 வழக்குகள், 2019-ல் 20 வழக்குகள், 2020 மற்றும் 2021-ல் தலா 23 வழக்குகள் பதிவு செய்து வடக்கு மண்டலத்தில் மட்டுமில்லாது மாநில அளவிலும் முன்னணியில் உள்ளனர். 

கடந்த ஆண்டில் காஞ்சிபுரம் 13, திருவள்ளூர் 4, கடலூர் 16, தி.மலை 9, விழுப்புரம் மாவட்ட பிரிவு 4 வழக்குகளை பதிவு செய்துள்ளன.

2020-ம் ஆண்டில் வேலூர் மண்டல இணை முதன்மை மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை பொறியாளர் பன்னீர்செல்வம் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.3.60 கோடி ரொக்கம், சுமார் மூன்றரை கிலோ தங்க நகைகள், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங் களையும் பறிமுதல் செய்தனர்.

2021-ம் ஆண்டு வேலூரில் பொதுப்பணித் துறை மண்டல தொழில்நுட்ப கல்வி செயற்பொறியாளர் ஷோபனாவிடம் இருந்து கணக்கில் வராத பணம் ரூ.20 லட்சம் மற்றும் ஓசூரில் உள்ள அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.2.07 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த இரண்டு மிகப்பெரிய வழக்குகளும் ஒட்டு மொத்த தமிழ்நாட்டையும் வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறை பக்கம் திருப்பி சபாஷ் போட வைத்தது அதன் ஹைலைட்ஸ். இது வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவுக்கு மிகச் சிறப்பாகவே கடந்து சென்றதுடன் மாநில அளவில் சிறப்பான செயல்பாட்டுக்கான பாரட்டையும் பெற்றுள்ளனர். 

இதன் தொடர்ச்சியாக 2021-ம் ஆண்டு  முன்னதாக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத பணம், முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்ட மணல் குவியல்களுடன் வெளிநாட்டு டாலர்கள், ஏராளமான சொத்து ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். 

இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிப்பதில் எங்களைவிட மக்களுக்கு அதிக பங்கு இருக்கிறது. கடந்த ஆண்டில் பதிவு செய்த 23 வழக்குகளில் 2 வழக்கில் மட்டும் அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கும்போது சிக்கியுள்ளனர். கடமையை செய்ய லஞ்சம் எதிர்பார்த்தால் எங்களிடம் வந்து தைரியமாக புகார் கொடுக்கலாம்.

கடந்த ஆண்டு வேலூர் பிரிவினர் பதிவு செய்த 23 வழக்குகளில் மட்டும் சுமார் 2.65 கோடிக்கு ரொக்கமாக பறிமுதல் செய்துள்ளோம். வழக்கமாக லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மட்டும் கைது செய்வது வழக்கம். ஆனால், கடந்த ஆண்டில் சுகாதார மேற்பார்வையாளருக்கு லஞ்சம் கொடுத்ததாக குடியாத்தம் உணவக உரிமையாளர் மற்றும் வேலூர் கற்பகம் சூப்பர் மார்க்கெட் மேலாண் இயக்குநருக்கு லஞ்சம் கொடுத்ததாக பிரபல தனியார் சோப்பு நிறுவன மேலாளர் என இரண்டு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளோம். இனி லஞ்சம் கொடுத்தாலும் வழக்குப்பதிவு செய்வோம்’’ என்றனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post