முன்விரோதம் காரணமாக காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற மூவர் கைது.!


மாசி சிவராத்திரியின் போது குலதெய்வம் கோயிலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கோவில்பட்டியில் இளைஞரை கார் ஏற்றி கொலை செய்ய முயன்ற 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவிலபட்டி அருகே இலுப்பையூரணியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் கோவில்பட்டி தெற்கு பஜாரில் தங்க நகை செய்யும் பட்டறை வைத்துள்ளார். இவரது மகன் அய்யனார் (25). இவர் தந்தையுடன் பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவரது தாய் செல்லத்தாய் தங்களது குலதெய்வக் கோயிலான சென்னம்பட்டி யிலுள்ள கற்குவேல் அய்யனார் கோயிலில் மாசி சிவராத்திரி திருவிழாவின்போது சாமி ஆடுவது வழக்கம். 

கடந்த ஆண்டு திருவிழாவின்போது, செல்லத்தாய் சாமி ஆடுவதை பிடிக்காத எட்டயபுரம் சுமங்கலி நகரைச் சேர்ந்த முனியசாமி மகன் பலவேசம் (31), மாரியப்பனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக நாலாட்டின்புதூர் போலீஸார் விசாரித்து இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி உள்ளனர். 

இதில் ஏற்பட்ட முன்பகை காரணமாக அய்யனாருக்கு, பலவேசம் அடிக்கடி மிரட்டல் விடுத்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டு மாசி சிவராத்திரி திருவிழா வர உள்ள நிலையில், நேற்று இரவு பட்டறையில் வேலை முடித்து வீட்டுக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்த அய்யனாரை, காரில் பின் தொடர்ந்த பலவேசம், இலுப்பையூரணி விலக்கு பகுதிக்கு வந்தபோது காரை வேகமாக இயக்கி மொபட் மீது மோதினார். இதில் அய்யனார் தூக்கி வீசப்பட்டார். 

அப்போது காரில் இருந்து இறங்கி வந்த பலவேசம், எட்டயாபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த சண்முகவேல் மகன் ஹரிஹரன் (23), சகாதேவன் மகன் அரிகரன்(21) ஆகியோர் காயமடைந்த கடந்த அய்யனாரை பார்த்துள்ளனர். அதற்குள் அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டதால் அவர்கள் அங்கிருந்து தப்பினர்.

இதுகுறித்து தகவலறிந்து கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக அய்யனார் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் பலவேசம் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.

Previous Post Next Post