300 மீட்டர் நீளமுள்ள மிகப் பெரிய சரக்கு பெட்டக கப்பல் MSC PETRA -முதன் முறையாக தூத்துக்குடி வருகை.!

 

இலங்கையில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற நிலையால் சர்வதேச சரக்கு பெட்டி முனையமாக விளங்கும் கொழும்பு துறைமுகத்தை தவிர்த்து முதன் முறையாக தூத்துக்குடி துறைமுகம் வந்துள்ளது MSC PETRA எனும் மிகப் பெரிய சரக்கு பெட்டக கப்பல்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள  பொருளாதார நெருக்கடி காரணமாக கலவரம் ஏற்பட்டுள்ள நிலையில் அந்நாடு ஸ்தம்பித்து போயுள்ளது. இதனால் சர்வதேச சரக்கு பெட்டிமுனையமான கொழும்பு துறைமுகத்திற்க்கு செல்லும் பெரிய கப்பல்கள் , சரக்குகளை ஏற்றி இறக்குவதில் காலதாமதம் ஏற்படுவதால் பண இழப்பு, நேர விரயம் ஏற்படுகிறது என புகார் கூறியதுடன், கொழும்பு துறைமுத்தை தவிர்க்குமாறு ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்களுக்கு அறிவுறுத்தியிருந்தது. இது குறித்து இலங்கை கப்பல் முகவர்கள் சங்கமும் அதிருப்தி தெரிவித்து அரசுக்கு கடிதம் எழுதியிருந்ததுடன், துறைமுகத்தில் அனைத்து பணிகளையும் நிறுத்துவதாக அறிவித்தது. பின்னர் அது விலக்கிக் கொள்ளப்பட்டது.

https://twitter.com/vocpa_tuticorin/status/1524975351180701697?t=QZf0yYfCwrsSa15PLDcnJw&s=19

இந்நிலையில் முதன் முறையாக கொழும்பு துறைமுகத்தை தவிர்த்து நேரடியாக தூத்துக்குடிக்கு வந்துள்ளது 300 மீட்டர் நீளமும், 40மீட்டர் அகலமும் கொண்ட MSC PETRA எனும் மிகப் பெரிய கப்பல். பிரான்ஸ் நாட்டின் ஆளுகையில் உள்ள Le Port, Reunion-ல் இருந்து 6627 சரக்கு பெட்டிகளுடன் (TUEs) கடந்த 7 ஆம் தேதி கிளம்பிய இந்த கப்பல் இன்று அதிகாலை சுமார் ஒரு மணியளவில் தூத்துக்குடி துறைமுகத்தின் DBGT சரக்கு பெட்டி முனையத்தை வந்து சேர்ந்தது.

இது குறித்து Dakshin Bharat Gateway Terminal  (DBGT)அதிகாரிகள் கூறுகையில்:- தூத்துக்குடிக்கு வழக்கமாக கொழும்பு துறைமுகத்திலிருந்து Feeder Vessel எனப்படும் சிறிய கப்பல்கள் மூலமாகவே சரக்கு பெட்டிகள் அனுப்பப்படும், அதன் அதிகபட்ச கொள்ளளவு, 1700 பெட்டிகள் (TEUs) மட்டுமே, ஆனால் இம்முறை மிகப் பெரிய சரக்கு கப்பலான MSC PETRA 6627 (TUEs) பெட்டிகளுடன் நேரடியாக இங்கு வந்திருக்கிறது. இதன் ஆழம்(DRAFT) 10 மீட்டர் , இதில் தூத்துக்குடியில் இறக்க வேண்டிய பெட்டிகள் மட்டும்  2937 (TUEs), அவற்றை இறக்கிய பின் இந்த கப்பல் இங்கிருந்து சிங்கப்பூர் செல்லும் என தெரிவித்தனர்.

345 மீட்டர் நீளமுள்ள சரக்கு பெட்டி முனையமான தூத்துக்குடி DBGT இறங்குதளத்தில் 300 மீட்டர் நீளமுள்ள கப்பல் முதன் முறையாக வந்திருப்பது தூத்துக்குடி துறைமுக வரலாற்றில் மைல்கல்லாகும் என துறைமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடியானது,  தூத்துக்குடி, கொச்சின் துறைமுகங்களுக்கு பெரிய கப்பல்களை கையாளுவதற்கான வாய்ப்புகளைத் திறந்துவிட்டுள்ளது. MSC கப்பல் நிறுவனம் ஏற்கனவே சில கப்பல்களை கொச்சின் மற்றும் தூத்துக்குடிக்கு திருப்பி விட்டுள்ளது. இந்நிலையில் இத்துறைமுகங்கங்கள் பெரிய கப்பல்களை கையாளுவதற்கான விசாரணைகள் கப்பல் நிறுவனங்களிடமிருந்து பெறுவதாக துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர்.




Ahamed

Senior Journalist

Previous Post Next Post