கேதர்நாத் புனித யாத்திரைக்கு பக்தர்கள் அனுமதி... ஆயிரக்கணக்கானோர் திரண்டு சாமி தரிசனம்

உத்தரகாண்ட் மாநிலத்தில், இமயமலை மீது சுமார் 12 ஆயிரம் அடி உயரத்தில் பனி படரும் பிரதேசத்தில் அமைந்துள்ளது கேதர்நாத் சிவன் கோவில். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையானதாக கருதப்படுகின்ற இந்த கோவிலில் சுயம்பு லிங்கமாக இறைவன் அருள்பாலிக்கிறார். 12 ஜோதிர்லிங்க கோவில்களில் ஒன்றாகவும் கேதர்நாத் கோவில் உள்ளது.

கேதர்நாத் கோவில், பனிப்பொழிவு மற்றும் கடுமையான காலநிலை காரணமாக ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் நவம்பர் வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்படும். மற்ற காலங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. பெரும் பனிப்பொழிவில் கோவில் முழுவதுமே உறைபனியால் மூடிவிடுவதும் உண்டு.

இந்த கோவிலுக்கு செல்ல, டெல்லியில் இருந்து 213 கி.மீ., தொலைவில் இமயமலை அடிவாரத்தில் உள்ள ஹரித்வார் புனித தலம் செல்ல வேண்டும். அங்கு இருந்து பஸ் அல்லது கார் மூலமாக 230 கி.மீ., இமயமலை மீது மலைப்பாதையில் பயணம் செய்ய வேண்டும். கங்கை ஆற்றங்கரையிலேயே செல்லும் இந்த பயணம் அலாதியானது. 

செல்லும் வழியில் தேவப்பிரயாகை, ருத்ரப்பிரயாகை போன்ற புனித தலங்களை தரிசிக்கலாம். 

சோன் பிரயாக் எனும் இடத்தில் இருந்து அங்கு உள்ள கவுரி குண்ட் என்ற மலைப்பாதை (நடைபாதை) தொடங்கும் இடத்துக்கு ஜீப் மூலம் சென்று, 19 கி.மீ., மலைப்பாதையில் நடந்து சென்று கேதர்நாத் கோவிலை அடையலாம். (அங்கு இதை 14 கி.மீ., என்று குறிப்பிட்டு இருப்பார்கள்). இந்த கோவில் செல்ல  இவ்வளவு கடினமான பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றாலும், லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டு தோறும் சென்று வருகிறார்கள். 

கடந்த நவம்பர் மாதத்தில் பூஜைகள் முடிந்து கோவில் பனிக்காலத்துக்காக பூட்டப்பட்டது.

இந்த நிலையில்,கேதர்நாத் கோவில்  பக்தர்கள் தரிசனத்துக்காக நேற்று திறக்கப்பட்டது. ராணுவத்தின் மெட்ராஸ் ரெஜிமெண்ட் பிரிவின் டிரம்ஸ் முழங்க இசை நிகழ்ச்சிகளுடன் கோவில் திறக்கப்பட்டது. ஒன்றரை டன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

முதல் மந்திரி புஷ்கர்சிங் தாமி பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். அவர் பிரதமர் மோடி சார்பில் ருத்ராபிஷேகம் நடத்தினார்.

தினமும் கேதர்நாத் கோவிலில் மட்டும் 12 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு கிட்டத்தட்ட மே மாதம் முழுமைக்குமே தங்குவதற்கான அறைகள் முன்பதிவுகள் நிறைந்து விட்டன. 

மலையுச்சியில் உள்ள நந்தி காம்ப்ளக்ஸ், ஸ்வர்க் ரோஹினி காம்ப்ளக்ஸ்களில் முழுமையாக பக்தர்கள் முன்பதிவு செய்து இருக்கிறார்கள். தனியார் லாட்ஜ்களில் மட்டும் இருக்கும் காலி இடங்களும் அதிக விலைக்கு முன்பதிவு செய்யப்படுகின்றன.

ஏற்கனவே கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்கள் திறக்கப்பட்டு விட்டன. நாளை(ஞாயிற்றுக்கிழமை) பத்ரிநாத் ஆலயமும் திறக்கப்படுகிறது. இதனால் சார்தாம் எனப்படும் இந்த நான்கு தல புண்ணிய யாத்திரைக்கு படையெடுக்கும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கும் என உத்தரகாண்ட் அரசு எதிர்பார்க்கிறது.

அதற்கான போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. வரும் தீபாவளி பண்டிகை வரை கேதர்நாத் கோவில் பக்தர்கள் தரிசனத்துக்காக திறந்திருக்கும்.

கேதர்நாத் கோவில் முன்பதிவு, ஹெலிகாப்டர் முன்பதிவு விபரங்களை இந்த லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் இருந்து கேதர்நாத் செல்வதற்கான வழிகாட்டுதலை இந்த லிங்க் கிளிக் செய்து வீடியோ பார்க்கலாம்.

Previous Post Next Post