பீஃப் பிரியாணிக்கு தடை: மாவட்ட ஆட்சியருக்கு SC/ST ஆணையம் நோட்டீஸ்.!

மாட்டுக்கறி பிரியாணிக்கு தடை விதித்தது பட்டியல் இன, இஸ்லாமிய மக்களுக்கு எதிரான பாகுபாடு. தீண்டாமை மற்றும் பாகுபாடு காட்டப்பட்டதா? என்ற அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என திருப்பத்தூர் கலெக்டருக்கு தமிழ்நாடு SC/ST ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மனித ஒருமைப்பாட்டுக்காக ஆம்பூர் பகுதியில் இருந்து அனைத்து பிரியாணி கடைகளையும் ஒன்று சேர்த்து பிரியாணி திருவிழாவைக் கொண்டாட திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, ஆம்பூர் வர்த்தக மையத்தில் வரும் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை 3 நாட்கள் பிரியாணி திருவிழா நடைபெறும். 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திருவிழா நடைபெறும். அதனைப்போலவே 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அன்றைய நாளில் பிற்பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை பிரியாணி திருவிழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

30க்கும் மேற்பட்ட அரங்குகள், 20க்கும் அதிகமான பிரியாணி வகைகள் என பிரியாணி திருவிழா நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க பார்வையாளர்கள் அனைவருக்கும் அனுமதி இலவசம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணி வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது. ஆம்பூர் பிரியாணி கடைகளில் பொதுவாக பீப் பிரியாணி மிக பிரபலம். ஆனால் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் படி திருவிழாவில் மாட்டுக்கறிக்கு தடை விதிக்கப்பட்டது சர்ச்சை ஏற்படுத்தியது. மாவட்ட ஆட்சியரின் இந்த அறிவிப்புக்கு விடுதலைச் சிறுத்தைகள், எஸ்.டி.பி.ஐ, மனித நேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து, மழையின் காரணமாக ஆம்பூர் பிரியாணி விழா நிறுத்தப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

இந்தநிலையில், மாநில எஸ்.சி, எஸ்.டி ஆணையம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு விளக்கம் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில், ‘திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகத்தின் தலைவராக நீங்கள் ஆம்பூரில் 20 வகைக்கும் கூடுதலான பிரியாணி வகையில் இடம்பெறும் பிரியாணி திருவிழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளீர்கள். அதுகுறித்த பத்திரிக்கை செய்தியில், மாட்டிறைச்சி பிரியாணி விழாவில் கிடையாது என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இரண்டு லட்சத்துக்கும் கூடுதலாக வாழும் பட்டியல் சாதியினர் மற்றும் முஸ்லீம் மக்கள் மீது பாகுபாட்டை காட்டும் வகையில் தீண்டாமையை நடைமுறைப்படுத்துள்ளீர்கள் என்ற ரீதியில் ஆணையம் விசாரணை மேற்கொள்ளவுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்கவேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post