50க்கும் மேற்பட்ட நிறுவனம் தொடங்கி 200 கோடி ரூபாய் மோசடி - தூத்துக்குடி பிரதர்ஸ் மூவர் கைது - போலீசாருக்கு சென்னை காவல் ஆணையர் பாராட்டு.!

லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களை குறிவைத்து 50க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் உருவாக்கி அவற்றின் மூலம் ரூ.200 கோடிக்கும் மேல் மோசடி செய்துள்ளனர் தூத்துக்குடியை சேர்ந்த உடன் பிறந்த சகோதரர்கள் மூவர்.


சில மாதங்களுக்கு முன் Fesa Industries Pvt. Ltd., Zenhawk International, Fedele Express, Revolvy International Pvt. Ltd., Zapo Tribros International' Pvt Ltd., etc ஆகிய நிறுவனங்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவில் தனியார் கண்டெய்னர் நிறுவனம் தங்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக தனித்தனியான புகார்கள் கொடுத்திருந்தன.  

வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு - ஆவணங்கள் மோசடி புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டபோது தனித்தனியாக கொடுக்கப்பட்ட மூன்று புகார்களும் ஜி.பி.ஆர். ரிசோர்ஸ் (GPR Resource Pvt Ltd) என்ற ஒரே நிறுவனத்தின் மீது கொடுக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் இவர்களிடமிருந்து GPR Resource என்ற நிறுவனம் ரூபாய் 15 கோடி மோசடி செய்திருப்பதும் தெரிய வந்தது.


போலீசார் விசாரணையில் ஈடுபட்ட போது, அப்படி ஒரு நிறுவனமே தமிழகத்தில் எங்கும் இயங்கவில்லை என்பதும் போலியான பெயரில் போலியான முகவரியில் போலியான ஆவணங்கள் கொடுத்து டெல்லி, மும்பை, சென்னை, தூத்துக்குடி, ஆந்திரா பகுதிகளில் போலியாக இயங்கி வந்தது தெரியவந்தது.

இவர்கள் நேரடியாக வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ளாமல் இணையதளம் மற்றும் ஈ-மெயில் மூலமாக மட்டுமே தொடர்பு கொண்டு வந்தது தெரியவந்தது. போலீசாரின் தொடர் விசாரணையில் தூத்துக்குடி பகுதியில் மிக சிறிய அளவிலான ஒரு அறையை வாடகைக்கு எடுத்து அங்கிருந்து இந்தியா முழுவதும் இவர்கள் மோசடி வலையை விரித்து வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து இணையதள முகவரி மற்றும் பல செல்போன் எண்களை ஆய்வு செய்து தூத்துக்குடியைச் சேர்ந்த பொன்ராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இல்லாத நிறுவனங்கள் பெயரில் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் நடத்தி அதன்மூலம் சரக்குகளை வெளிநாடுகளுக்கு அனுப்பும் சரக்கு உரிமையாளர்களுக்கு வலைவிரித்து மோசடி செய்தது அம்பலமானது.

உடன்பிறந்த சகோதரர்களான பொன். ராஜ், பொன். ரவி, பொன்.ரகு ஆகியோர் இணைந்து இந்த மோசடி செய்ய திட்டமிட்டு அதன்படி மோசடி செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். மோசடி செய்வதற்காக தங்களது தந்தை பெயரான குணசேகரன் மற்றும் தங்களது பெயர்களை இணைத்து GPR Resource என்ற நிறுவனத்தை போலியாக உருவாக்கி உள்ளனர்

பொதுவாக சரக்குகள் வைத்திருக்கும் அதன் உரிமையாளர்கள் கண்டெய்னர்களை வாடகைக்கு எடுத்து அதன் மூலம் கப்பலில் வெளிநாடுகளுக்கு தங்களது சரக்குகளை விற்பனை ஏற்றுமதி செய்வது வழக்கம். அந்த வகையில் GPR சகோதரர்கள் GPR Resources private Ltd, GPR Endeavour private Ltd, Zapo Tribros, International (P) Ltd, Revolvy International (P) Ltd, Fesa Industries (P) Ltd, GPR Port, infrastructure & Development (P) Ltd, Sea ways Logistics Pvt. Ltd. Bose & Co., Fedele Express line (P) Ltd, Zen Hawk International Liners, AlmendrasInternational liners (P) Ltd, Baersk International (P)Ltd, Team up Cargo Pvt Ltd Joel International, Triphibian Express Pvt.Ltd, Kaizen International Lines Pvt. Ltd., Rotus International (P) Ltd GPR Poly Fibers Pvt.Ltd, Fin cloud Solutions Pvt. Ltd, E. Hook InfoTech Pvt. Ltd. இதுபோன்று 50க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை உருவாக்கி அதற்கென இணையதளங்களையும் உருவாக்கி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.


இந்த நிலையில் சரக்குகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் சரக்கு உரிமையாளர்களிடம் GPR சகோதரர்கள் தொடர்புகொண்டு தங்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட கண்டெய்னர் உரிமையாளர்களிடம் தொழில்முறை பழக்கம் உள்ளதாகவும் தங்களிடம் குறைவான விலையில் வாடகைக்கு கண்டெய்னர் எடுத்துக் கொள்ளலாம் எனவும் அதற்கு கணிசமான முறையில் கமிஷன் தர வேண்டும் எனவும் கூறியுள்ளனர். GPR சகோதரர்கள் கூறிய போலி நிறுவனங்களுக்கு கால் செய்து சரக்கு உரிமையாளர்கள் கேட்டபோது மற்ற நிறுவனங்களை விடவும் கண்டெய்னர் குறைவான தொகையில் வாடகைக்கு கிடைக்கும் என நம்ப வைத்துள்ளனர். இதனையடுத்து சரக்கு உரிமையாளர்களிடமிருந்து போலியாக உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் முன்பணமாக கோடிக்கணக்கில் வசூல் செய்துள்ளனர்.

ஒரு நபரிடம் மோசடி செய்து விட்டால் அந்த போலியான நிறுவனத்தின் இணையதளம் நீக்கப்படுவதுடன் அந்த போலி நிறுவனத்திற்காக பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்களும் அனைத்து வைக்கப்படுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். பின்னர் அடுத்த மோசடிக்கு அடுத்த இணையதளம் உருவாக்கி அதற்காக போலி சிம் கார்டுகளையும் வாங்கி பயன்படுத்தி வந்துள்ளனர். 

இதேபோன்று நூற்றுக்கணக்கான சரக்கு உரிமையாளர்களிடம் இருந்து ரூபாய் 200 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளார்கள் என மத்திய குற்றப்பிரிவு - ஆவணங்கள் மோசடி புலனாய்வு பிரிவு போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர்.

மேலும், சரக்கு தொடர்பான அனைத்து ஆவணங்கள் ஷிப்பிங் பில்கள், இன்வாய்ஸ், லோடிங் பில் ஆகியவை போலியாக உருவாக்கப்பட்டு எந்த சரக்கும் பரிமாற்றமும் மற்றும் ஏற்றுமதி நடைபெறாமலே, ஏற்றுமதி நடந்துள்ளதாக கூறி மோசடி செய்யப்பட்டதும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

போலியாக உருவாக்கப்பட்ட நிறுவனங்களிலிருந்து சரக்கு உரிமையாளர்களிடம் பேசுவதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களை GPR சகோதரர்கள் பணியில் அமர்த்தி உள்ளனர். இவர்களின் மூலம் மோசடி செய்யப்பட்ட பணத்தை பல்வேறு வங்கிகளில் 61 கணக்குகள் தொடங்கி அதன் மூலம் பண மோசடி செய்து பின் அந்த வங்கிக் கணக்கை முடக்கி வந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பொன்ராஜ் அளித்த தகவலின் பேரில் அவரது நண்பரான தூத்துக்குடியைச் சேர்ந்த டேவிட் (எ) கெவிராஜ், கோகுல்நாத் (எ) டேனியல், பாண்டிச்சேரியைச் சேர்ந்த பேட்ரிக்மாரி (எ) விஜயமுருகப்பா ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான பொன்ராஜின் உடன் பிறந்த சகோதரர்களான பொன்.ரவி, பொன்.ரகு மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

குறிப்பாக கைது செய்யப்பட்டுள்ள GPR சகோதரர்களில் மூத்தவரான பொன்ராஜ் பட்டப்படிப்பு படித்துவிட்டு பல ஆண்டுகளாக சரக்கு கப்பல்களில் வேலை பார்த்ததும் அதில் கண்டெய்னர் வாடகைக்கு விடும் தொழிலில் அதிக லாபம் வருவதை அறிந்த பொன்ராஜ் அதை வைத்து திட்டமிட்டு கடந்த 2017 ம் ஆண்டிலிருந்து மோசடி செயலில் ஈடுபட்டு வந்தததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மோசடி செய்த 4 நபர்களை கைது செய்து, 188 சவரன் தங்க நகைகள்,  பணம் ரூ.58,08,600/- 2 கார்கள் மற்றும் கணினி இயந்திரங்களை கைப்பற்றிய மத்திய குற்றப்பிரிவின் ஆவணங்கள் மோசடி புலனாய்வு பிரிவு (EDF) காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜெய்ஸ்வால் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.


Previous Post Next Post