இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி - மாவட்ட வன அதிகாரி அபிஷேக் தோமர் தொடங்கி வைத்தார்.!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் 5 ஆயிரம் மரக் கன்றுகள் நடும் பணியை மாவட்ட வன அதிகாரி அபிஷேக் தோமர் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், தெற்கு மண்டல குழாய் பாதை திட்டம் சார்பில் மதர் சமூக சேவை நிறுவனத்தின் மூலம் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்க விழா முள்ளக்காடு அருகே உள்ள கிரேஸ் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வருகை  தந்தவர்களை மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ். ஜே. கென்னடி வரவேற்றார். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன முதன்மை மேலாளர் பி. குருமூர்த்தி தலைமை தாங்கினார். உதவி மேலாளர்கள் ஜீ. சிவகுமார், எம். பரத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்ட வன அதிகாரி அபிஷேக் தோமர் கலந்து கொண்டு 5 ஆயிரம் மரக் கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்துப் பேசியதாவது... 

"இயற்கை வளங்கள் அழிந்து வருகின்றன இயற்கை வளங்களான கடல் வளம், வன வளம், மலை வளம் போன்ற அனைத்து இயற்கை வளங்களையும் பாதுகாக்க வேண்டும்.பூமியைச் சுற்றியுள்ள காற்று மண்டலத்தில் சமீபகாலமாக கார்பன்-டை-ஆக்சைடு அளவு அதிகரிக்கிறது இதன் காரணமாக பூமியின் வெப்ப நிலை உயர்ந்து தென் துருவப் பனிப் பிரதேசம் உருவாக்குவதன் மூலம் கடலின் நீர் மட்டம் உயரக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. பூமி வெப்பமயமாதல் தடுப்பதற்கும், காற்று மாசுபட்டுவருவதை தடுப்பதற்கும் அதிகளவில் மரங்களை வளர்க்க வேண்டும்.  தூத்துக்குடி மாவட்டத்தில் குறைவான 5.4 சதவிகித பசுமை காடுகள் மட்டுமே உள்ளன. இதனை 33 சதவிகிதமாக உயர்த்த  வேண்டும். அதற்கு கல்லூரி, பள்ளி, மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அதிகளவு மரக்கன்றுகளை நட்டு, பாதுகாத்து, வளர்க்க, வேண்டும். மரங்களை வளர்ப்பது மக்கள் இயக்கமாக மாற வேண்டும்" எனக் கூறினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி வனசரக அலுவலர் சிவசுப்பிரமணியன், கிரேஸ் பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் ரிச்சர்ட் , தலைவர் ஜோஸ்வா, துணைத் தலைவர் ஸ்டீபன், நிர்வாக அலுவலர் தினகரன், உடற்பயிற்சி இயக்குனர் கணேஷ மூர்த்தி, போதகர் சைமன் தர்மராஜ், மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர். 

முடிவில் மதர் சமூக சேவை நிறுவன ஒருங்கிணைப்பாளர் எஸ் பானுமதி நன்றி கூறினார். இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள  பள்ளி, கல்லூரி வளாகங்களிலும் தொடர்ந்து மரக்கன்றுகள் நட திட்டமிடபட்டுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதர் சமூக சேவை நிறுவன பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post