திருவண்ணாமலை சென்ற தூத்துக்குடி பக்தர் மூச்சுத்திணறி விழுந்து மரணம்.!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகாவிற்கு உட்பட்ட தென் மகாதேவமங்கலம், கடலாடி கிராமத்திற்கு இடையே மிகவும் பிரசித்தி பெற்ற தென் கைலாயம் என்று அழைக்கப்படும் பருவதமலை அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 4 ஆயிரத்து 568 உயரம் கொண்ட மலை உச்சியில் மல்லிகார்ஜுனேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது.

பருவத மலைக்கு பவுர்ணமி மற்றும் வார விடுமுறை நாட்களில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு நேற்று முன்தினம் மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் மலை மீது ஏறி சென்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் பருவதமலைக்கு வந்து கொண்டு வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் நேற்று தூத்துக்குடியை சேர்ந்த பொன்ராஜ் என்ற பொன்னுசாமி வயது (வயது 40) உறவினர்கள் 4 பேருடன் மலை மீது ஏறி சென்று கொண்டிருந்தார். செங்குத்தான கடப்பாரை படி மேல் மேல் ஏறும் போது திடீரென பொன்ராஜ்க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். இதை கண்டு அவருடன் வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மருத்துவ குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர்.

மருத்துவக் குழுவினர் விரைந்து வந்து பொன்ராஜை பரிசோதித்த போது அவர் ரத்த அழுத்த குறைவு காரணமாக மூச்சு திணறி இறந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் டோலி கட்டி சடலத்தை கீழே இறக்கினர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சடலம் அனுப்பி வைக்கப்பட்டது. இறந்த பொன்ராஜ்க்கு பானுப்பிரியா என்ற மனைவியும், 6 வயதில் ஒரு மகனும், 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இதுகுறித்து கடலாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இறந்த பொன்னுசாமி என்ற பொன்ராஜ் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஷிப்பிங் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post