பட்டா மாறுதல் தரவில்லை எனக்கூறி சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தை 300க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகை


50 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருக்கும் பொதுமக்களுக்கு பட்டா மாறுதல் தரவில்லை எனக்கூறி, சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தை 300க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.


சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகர்  பேரூராட்சியில்  50  ஆண்டுகளுக்கும் மேலாக வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை  மற்றும்  பொதுப்பணித்துறை ஆகியவற்றிற்கு  சொந்தமான  இடங்களில்  சுமார்  600க்கும்  மேற்பட்டவர்கள் பட்டா பெற்று, வீடுகட்டி, அனைத்து  வரியினங்களையும்  செலுத்தி குடியிருந்து  வருகிறார்கள். ஆனால்  வருவாய்த்துறை  ஆவணங்களில்  பவானிசாகரில்  பட்டா  பெற்று குடியிருப்பவர்களுக்கு  கிராம  கணக்கில், உரிய  வகை  மாற்றங்கள்  செய்யப் படவில்லை. இதனால்  கடனுதவி  பெறுவதிலும், பட்டா  மாறுதல்  செய்வதிலும் மிகுந்த  இடையூறு  ஏற்படுகிறது  எனக்கூறி, இன்று சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தை  300க்கும் மேற்பட்ட  பெண்கள் முற்றுகையிட்டு  போராட்டத்தில் ஈடுபட்டனர்.இரண்டு  மணி  நேரத்திற்கும்  மேலாக  சத்தியமங்கலம்  வருவாய்  வட்டாட்சியர் அலுவலக  நுழைவு  வாயிலில், தரையில் அமர்ந்து  போராட்டத்தில்  ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் வட்டாட்சியர் கார்த்திக் பொதுமக்களிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். மாவட்ட ஆட்சியரிடம் சொல்லி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இது  குறித்து  முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம்  கூறுகையில், இப்பிரச்சனை  குறித்து  இன்னும் பத்து  நாட்களுக்குள்  மாவட்ட  ஆட்சியர்  நடவடிக்கை  எடுக்கவில்லை  என்றால், பவானிசாகரில் கடையடைப்பு  மற்றும்  ஆர்ப்பாட்டமும்  நடைபெறும்  எனக்கூறினார்.