நத்தத்தில் கள்ளத்தனமாக மதுவிற்பனை, அதிரடியாக பறிமுதல் செய்த காவல்துறை

நத்தம் பகுதிகளில் அதிரடியாக  சோதனை நடத்திய போலீஸார் கள்ளத்தனமாக விற்பதற்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1080 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

 


 

நத்தம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம கிராமங்களைக் கொண்டது. இங்கிருந்து கோயம்புத்தூர், திருப்பூர், பொள்ளாச்சி, சிவகங்கை,காரைக்குடி, தேவகோட்டை செல்லும் ஏராளமான பயணிகள் வந்து செல்லும் முக்கிய பேருந்து நிலையமாக நத்தம் பேருந்து நிலையம் உள்ளது. நத்தம் பகுதியில் இயங்கிவந்த  மதுக்கடைகள் சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டன.  இதனால் உள்ளூர் மதுப் பிரியர்கள், வெளியூரில் இருந்து  வரும் மதுபானப் பிரியர்கள் மது வாங்கி அருந்த முடியாமல் திண்டாடிப் போயினர். இதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட பலர் நத்தம் பகுதியில் உள்ள  கடைகளில் வைத்து கள்ளத்தனமாக மது விற்கும் செயல்களில் ஈடுபட்டனர். இதனால்  நத்தம் முழுவதும் தெருவுக்குத் தெரு கள்ளத்தனமாக மது விற்போரின் எண்ணிக்கை பெருகியது.இது குறித்து போலீசாரும் சில்லரை விற்பனையில் ஈடுபட்டவர்கள் மீது அப்போது வழக்கு பதிவு செய்து வந்தனர். நத்தத்தில் கடை இருந்த காலத்தைவிட கூடுதலான அளவுக்கு மது விற்பனை நடந்தது. இதுகுறித்து மாவட்ட  காவல்துறையினருக்கு புகார் சென்றது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் அவர்களின் உத்தரவின் பேரில் எஸ்.பி தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் நத்தம் காவல் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி தலைமையிலான 10க்கும் மேற்பட்ட காவல்துறையினர் நேற்று நத்தம் பேருந்து நிலையம்,நத்தம் அவுட்டர், கோவில்பட்டி  உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையில் கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்ட புன்னப்பட்டியை சேர்ந்த  அழகன் மகன்  நடராஜ்(வயது27), துரைசாமி மகன் ராஜேஷ் (வயது44) மற்றும் நத்தத்தை சேர்ந்த  ராஜேந்திரன் மகன் மூர்த்தி (வயது39)உள்ளிட்ட 3 பேர் சிக்கினர். இவர்களிடம் இருந்து சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய  1080 மதுபாட்டில்கள் பெட்டி பெட்டியாக சிக்கியது. இவற்றைப் பறிமுதல் செய்த நத்தம் போலீசார் மதுவிற்பனையில் ஈடுபட்ட 3 பேரையும் கைது செய்தார். மேலும் இதுபோன்று கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டு வரும் முக்கிய வியாபாரியான மதுரையை சேர்ந்த போஸ் மற்றும் சாணார்பட்டி அருகே கோணபட்டியை சேர்ந்த அய்யனார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும்  போலீசார் தேடி வருகின்றனர்.

Previous Post Next Post