சேலம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர்  சி.அ.ராமன் தலைமையில்  நடைபெற்றது.


 
 தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். வேளாண் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்ற அனைத்துத் திட்டங்களையும் வேளாண் பெருமக்களுக்கு முழுமையாக கிடைத்திட மாவட்ட  நிர்வாகம் முனைப்போடு பணியாற்றி வருகின்றது. விவசாயிகளின் உற்பத்திகளை உயர்த்த வேண்டி பல வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தியும், அதனை தொடர்புடைய தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்த்து அதிக வளர்ச்சி விகிதத்தை அடைவதற்கான நடவடிக்கைகளை வேளாண்மைத்துறை மேற்கொண்டு வருகிறது.


 


விவசாயிகளுக்கு நல்ல வருவாயும், விவசாய பொருட்களுக்கு மதிப்பு கூட்டுதல் மூலம் அவர்களுக்கு பொருளாதார நிலையை மேம்படுத்த ஏற்கனவே உள்ள பயிர் சுழற்சி மற்றும் பயிர் பரவல் ஆக்கல் தொழில்நுட்பங்களுடன் கூடுதலாக ஒருங்கிணைந்த வேளாண்மை பயனற்ற நில மேலாண்மைத் திட்டம், நீடித்த வறட்சி நில மேலாண்மை கூட்டுப் பண்ணையம், விரிவான நீர் வடிநில பகுதி, வளர்ச்சி செயல்பாடுகள், நுண்ணீர் பாசனம் மூலம் நீர் மேலாண்மை, பசுமை உரங்கள், உயிர் உரங்கள் மூலம் மண் வளம் வளர்ச்சி, நீடித்த கரும்பு விவசாய வளர்ச்சி முன்னெடுப்புகள், இயற்கை உர வேளாண்மை,  விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற பொருளுக்கு உரிய விலை கிடைப்பதற்கும், ஒருங்கிணைந்த சத்து மேலாண்மை மேற்கொள்ளுதல், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, வேளாண் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


 
  சேலம் மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழையளவு 997.9 மிமீ ஆகும். நடப்பாண்டில் 23.01.2020 முடிய 1.4 மி.மீ பெய்துள்ளது. சேலம் மாவட்டத்தில் ஜனவரி - 2020 மாதம் முடிய 2,08,610 எக்டர் பரப்பில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் நெல் தானியம் 187.931  மெட்ரிக் டன்னும், சிறுதானியங்கள் 47.218  மெட்ரிக் டன்னும், பயறுவகைகள் 149.256 மெட்ரிக் டன்னும், எண்ணெய் வித்து 162.560 மெட்ரிக் டன் விதைகளும், பருத்தி 6.387 மெ.டன்னும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இரசாயன உரங்களான யூரியா 27,153 மெட்ரிக் டன்னும், டி.ஏ.பி 13,093 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 13,137  மெட்ரிக் டன் மற்றும் கலப்பு உரங்கள் 21,773 மெட்ரிக் டன்னும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
 


சேலம் மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் பழங்கள், காய்கறிகள், வாசனை திரவியங்கள், மலைப்பயிர்கள், மருத்துவப் பயிர்கள் மற்றும் மலர்களுக்கு 74,073 எக்டரில் பயிர் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 72,032.80  எக்டரில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், பயிர் உற்பத்தியில் 14.628 லட்சம் மெ. டன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 13.35 இலட்சம் மெ. டன் பயிர் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 
பட்டுவளர்ச்சித்துறையின் சார்பில் 568.20 ஏக்கரில் மல்பெரி சாகுபடியும், 6,16,605 கி.கி பட்டுக்கூடு உற்பத்தியும் செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை கடன்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் நடப்பாண்டில் இதுவரை ரூ.540.60 கோடி குறுகிய கால கடன் மற்றும் ரூ.28.02 கோடி மத்திய கால முதலீட்டு கடனும் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சி.அ.ராமன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
 முன்னதாக, தென்னையில் வெள்ளை சுருள் பூச்சி தாக்குதலை தடுக்கும் முறைகள் குறித்தும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புதிய ரகங்கள் குறித்தும் சந்தியூர் முஏமு திட்ட ஒருங்கிணைப்பாளர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் விவசாயிகளுக்கு மின்திரை விளக்கப்படம் மூலமாக விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
 


இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் அ.பெரியசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.திவாகர், மண்டல இணை இயக்குநர் கால்நடைபராமரிப்புத்துறை புருஷோத்தமன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் கோ.ராஜேந்திரபிரசாத், வேளாண் இணை இயக்குநர் (பொ) பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஆர்.செல்லதுரை, நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் பாமா புவனேஸ்வரி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் வி.மாணிக்கவேலு மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.