ஏப்ரலில் தொடங்குகிறது என்.பி.ஆர்., பணிகள்: தாய் மொழியில் தகவல் சேகரிக்க ஏற்பாடு!!!

என்.பி.ஆர்., எனப்படும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டின்போது என்னென்ன ஆவணங்கள் கேட்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அதுதொடர்பாக வெளிவரும் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் என்.பி.ஆர். எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடு அனைத்து வீடுகளிலும் கடந்த 2010-ல் எடுக்கப்பட்டது. பின்னர் மீண்டும் 2015-ல் அப்டேட் செய்யப்பட்டது. இதற்கிடையே இந்தாண்டு என்.பி.ஆர். சென்செக்ஸ் எனப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஏப்ரலில் தொடங்கி செப்டம்பர் வரையில் இந்தாண்டு மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.


வீடு வாரியாக, தங்கியிருத்தல் வாரியாக என 2 கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக ஏப்ரல் செப்டம்பர் 2020-லும், அடுத்ததாக மக்கள்தொகை மொத்த கணக்கீடு 2021 பிப்ரவரி 9-ல் தொடங்கி 28 வரையிலும் நடத்தப்படவுள்ளது.


இந்த முறை என்.பி.ஆர்.-ல் 21 தகவல்கள் கேட்கப்படவுள்ளன. தாய், தந்தை பெயர், பிறந்த இடம், கடைசியாக தங்கியிருந்த இடம் உள்ளிட்டவை இவற்றில் அடங்கும். அத்துடன் ஆதார் எண்ணை விருப்பம் இருந்தால் அளிக்கலாம். வாக்காளர் அட்டை எண், மொபைல் போன், ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவை கேட்கப்படவுள்ளது.


முதன்முறையாக புதிய என்.பி.ஆர். அவரவர் தாய் மொழியில் கேட்கப்படவுள்ளது.


தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படலாம் என்கிற அடிப்படையில் மேற்கு வங்கம், கேரளா ஆகியவை தங்களது மாநிலங்களில் என்.பி.ஆர். பணிகளை நிறுத்தி வைத்துள்ளன. இதற்கு சட்டம் ஒழுங்கு பாதுகாப்பும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.


இந்த இரு மாநிலங்களின் முதல்வர்கள் என்.பி.ஆர். நடவடிக்கையை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். தேசிய குடிமக்கள் பதிவேடான என்.சி.ஆர். தயாரிப்பதற்கு இந்த என்.பி.ஆர். அடிப்படையாக அமையும். என்.சி.ஆர். முஸ்லிம்களை பாதிக்கும் என்று கருத்து நிலவுவதால் என்.பி.ஆர்.யை மேற்கொள்வதற்கும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.


இருப்பினும் குடியுரிமை சட்ட திருத்தம் என்பது, பாகிஸ்தான், வங்க தேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து வரும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்குமே தவிர, இங்குள்ள முஸ்லிம்களின் குடியுரிமையை பறிக்காது என்று மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


மேற்கு வங்கம், தெலங்கானா, ஆந்திரா, லடாக், பாண்டிச்சேரி ஆகியவை என்.பி.ஆர். தகவல்களை சேகரிப்பது தொடர்பான தேதியை இந்திய பதிவாளர் ஆணையத்திற்கு அனுப்பவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்புடன் என்.பி.ஆர். பணிகள் ஏப்ரல் 1ம் தேதி தொடங்கவுள்ளன.