திரேஸ்புரம் பகுதி மீனவர்கள் துறைமுகத்திற்குள் வர தடை - கொரொனா காரணமாக மீன்பிடி தடையை அகற்ற கோரி, மீனவர்கள் போராட்டம்


மீன்வளத்துறை சார்பில் கொரொனா தொற்று அதிகரித்து வருவதால் மறு உத்தரவு வரும் வரை மீன் பிடிக்க தடை என அறிவித்ததால் தூத்துக்குடி மீனவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததையடுத்து அப்பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது , இதனையடுத்து மீன்பிடித்துறை முகத்தில் மீன்வளத்துறை சார்பில் இன்று எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது, அதில் கொரொனா தொற்று அதிகரித்து வருவதால் மறு உத்தரவு வரும் வரை மீன் பிடிக்க கடலுக்கு செல்ல தடை என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரொனாவால் ஏற்கனவே வாழ்வாதாரமின்றி தவித்து வரும் இவ்வேளையில் மீன் பிடிக்க தடை அறிவிப்பால் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் துறைமுகத்தில் போராட்டம் செய்தனர்.இதுகுறித்து தகவல் தென்பாகம் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆய்வாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டனர். மேலும் டிஎஸ்பி கணேஷ் சம்பவம் இடத்தை பார்வையிட்டு, பேச்சுவார்த்தை நடத்தினார், இந்த பேச்சுவார்த்தையில் டிஎஸ்பி கணேஷ், மீன்வளத்துறை இயக்குநர், ஆய்வாளர் கிருஷ்ணகுமார்,மற்றும் மீனவ சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் சுமூகமான முடிவு எடுக்கப்பட்டது,கொரொனா அதிகம் பாதிப்புள்ளாகி, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட திரேஸ்புரம் பகுதியை சேர்ந்தவர்கள் மீன் பிடித்துறைமுகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுவதாகவும், மற்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் பாஸ் மூலம் அனுமதிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதனால் போராட்டம் கைவிடப்பட்டு, நாளை முதல் விசைப்படகுகள் கடலுக்கு செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது