மக்கள் நலத் திட்டம் என்ற பெயரில் ஸ்டெர்லைட் காப்பர் விஷமப் பிரச்சாரம் - ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் குற்றச்சாட்டு!


மக்கள் நலத் திட்டம் என்ற பெயரில் ஸ்டெர்லைட் காப்பர்  விஷமப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் புகார் தெரிவித்துள்ளனர். 

நடைபெற உள்ள முதல் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே தமிழகத்தில் தாமிர உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு அனுமதி இல்லை என்று கொள்கை முடிவெடுத்து சிறப்பு சட்டமாக இயற்ற முதலமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க, மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் மனு அளித்தனர். 

இது தொடர்பாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியருக்கு அளித்த மனுவில் கூறியிருப்பதாவது :

நீர், நிலம் காற்றை நஞ்சாக்கி மக்களை கேன்சர் உள்ளிட்ட உயிர்க்கொல்லி நோய்களுக்கு பணியாற்றிய வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 25 ஆண்டு காலமாக பொதுமக்கள் போராடி வந்தார்கள். அதிமுக ஆட்சியில் 2018 பிப்ரவரி 12ஆம் தேதியில் இருந்து 100 நாட்கள் தொடர் போராட்டம் நடந்தது. அதனைத் தொடர்ந்து மே 22, 2018ல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க சென்ற பொதுமக்கள் 15 பேரை ஈவு இரக்கமின்றி காவல்துறை சுட்டுக்கொன்றது. இந்த சம்பவத்தில் பலரும் முடமானார்கள். இதனால் அரசாணை மூலம் தமிழக அரசு சீல் வைத்து ஸ்டெர்லைட்டை மூடியது.

மேற்படி அரசாணை பலவீனமானது மீண்டும் ஆலையை திறக்க வாய்ப்பு உள்ளது என அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் அவர்கள் உட்பட பல்வேறு கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள், அறிவுத்துறையினர், பத்திரிக்கைகள் உட்பட பலரது தரப்பினரும் கருத்து தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தமிழக முதல்வர் "திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கொள்கை முடிவு எடுத்து சிறப்பு சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் அகற்றப்படும் என அறிக்கைகள் பேட்டிகள் வாயிலாக மற்றும் தேர்தல் வாக்குறுதியாகவும் கொடுத்திருந்தார்.

ஆட்சிக்கு வந்தவுடன் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு கல்வித் தகுதிக்கேற்ற வேலை, சட்ட முரணாக போலீஸ் காவலில் இருந்த 93 பேருக்கு ரூபாய் ஒரு லட்சம் நஷ்டஈடு, வழக்குகள் வாபஸ், போராட்ட வழக்கில் உள்ள ஒருவர் பாஸ்போர்ட் அரசு வேலையில் சேர்வதற்கு தடையில்லா சான்று என அறிவித்து நடைமுறைப்படுத்தினார். இது தமிழக மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்று நம்பிக்கையை ஏற்படுத்தியது.

உச்சநீதிமன்றத்தில் கொரானா பேரிடர்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற சூழ்நிலையை சாதகமாக்கி ஆக்சிசன் தயார் செய்வதற்கு ஜூலை 31 வரை ஸ்டெர்லைட் ஆலை அனுமதி பெற்றது. அதனை பயன்படுத்தி மக்கள் நலத் திட்டங்கள் என்ற பெயரில் மக்களுக்கு பணம் பொருள் இலவசமாக கொடுத்து வருகிறது.

தூத்துக்குடி அரசு கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு கட்டில், வீல்சேர், வர்ணம் பூசுதல், எலக்ட்ரிக்கல் வேலை செய்து வருகிறது. ஸ்டெர்லைட் வழங்கிய மேற்படி பொருள்களுக்கு வேதாந்தா ஸ்டெர்லைட் காப்பர் என்று எழுதி விளம்பரம் செய்து வருவது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதனால் மீண்டும் திறக்கப்படும் என்ற விஷமப் பிரச்சாரம் செய்து வருகிறது. இதற்கு உதவியாக உள்ள அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே தமிழக முதல்வர் அவர்கள் பொதுமக்கள் நலன் கருதி வரும் 21.6. 2021 அன்று நடைபெற உள்ள முதல் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே தமிழகத்தில் பெருவீத தாமிர உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு அனுமதி இல்லை என்று கொள்கை முடிவெடுத்து சிறப்புக் சட்டமாக இயற்றி ஸ்டெர்லைட்டை தூத்துக்குடி மண்ணிலிருந்து நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்.மேற்படி கோரிக்கையை வலியுறுத்தி மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை பொதுமக்கள் சார்பில் நாங்கள் சந்தித்து பேசவும் எங்களுக்கு ஏற்பாடு செய்து தருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். என கூறப்பட்டுள்ளது.

Previous Post Next Post