திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.150 கோடியில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் - அமைச்சர் சேகர்பாபு தகவல்.!


திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திருப்பணிகள், அன்னதானகூடம், சமையல் அறை, பஞ்சாமிர்தம் தயார் செய்யும் அறை மற்றும் 

அடிப்படை வசதிகள் தொடர்பான பணிகள் ஆகியவற்றினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மீன் வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்  முன்னிலையில் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். 

ஆய்வின்போது, திருக்கோயிலில் மேற்கொள்ளப்படும் திருப்பணிகள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் தொடர்பான பணிகளையும் விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள். 

பின்னர் அமைச்சர் சேகர் பாபு  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையின்போது, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வரைவுத்திட்டம் தயாரிக்கப்பட்டு ரூ.150 கோடி செலவில் தனியார் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் நிதியோடு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கும் மற்றும் எளிதாக சுவாமி தரிசனம் செய்வதற்கும் அனைத்து ஏற்பாடுகளும் விரைவில் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள். 

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கடந்த மாதம் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்  மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் ஆலோசனை செய்து வரைவு திட்டத்தை தயாரித்துள்ளோம். 

இதுதொடர்பாக தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகிய நான் மற்றும் அமைச்சர் பெருமக்கள், துறை செயலாளர், துறை ஆணையர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஆலோசனையில்பேரில், 

அந்த வரைவு திட்டத்தில் சில மாற்றங்களை மேற்கொண்டு புதிய வரைவு திட்டம் தயார் செய்யும் பணியில் திருக்கோயில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் குழு ஈடுபட்டு வருகிறது. வரைவு திட்ட அறிக்கை இறுதியானவுடன்  தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து அவர்களின் ஆலோசனை பெற்று வெகு விரைவில் திருக்கோயில் திருப்பணிகள் துவங்கப்படும். 

திருக்கோயிலுக்கு ஆய்வுக்கு வந்தபோது, மீன்வளத்துறை அமைச்சர் பக்தர்களின் கோரிக்கையான, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை துறை செயலாளர் அவர்களுடன் ஆலோசித்து விரைவில் நிறைவேற்ற ஏற்பாடுகள் செய்யப்படும். 

மேலும், திருக்கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், தரிசனத்திற்கு பக்தர்கள் அதிக நேரம் காத்திருப்பதாகவும், வி.ஐ.பி.க்கள் என்று வருபவர்களை முன்கூட்டியே தரிசனத்திற்கு அனுமதிப்பதால் பக்தர்கள் அதிக நேரம் வரிசையில் நின்று தரிசனம் செய்வதற்கு காத்திருப்பதாக புகார் தெரிவித்தனர். 

வி.ஐ.பி. தரிசனமுறையை கட்டுப்படுத்த  மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அவர்கள், இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் மற்றும் மாவட்ட ஆட்சிததலைவர் அவர்கள் ஆகியோர்  தலைமையில் நாளை (15.09.2021) கூட்டம் நடைபெற உள்ளது. 

மேலும் ஒரே நேரத்தில் சுமார் 200 அர்ச்சகர்கள் பணியில் கூட்டமாக இருப்பதால் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு கால தாமதம் ஏற்படுவதாகவும் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனவே போதிய அளவு அர்ச்சகர்கள் இருப்பதால் சுழற்சி முறையில் அவர்களுக்கு பணிகள் வழங்குவது தொடர்பாகவும் நாளை நடைபெறும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.  

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு, ஆலோசனை கூட்டத்தில் முடிவில் எடுக்கப்படும் முடிவுகள் தொடர்பாக கலந்தாலோசித்து பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்வதற்கு தேவையான ஏற்பாடுகள் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் விரைவில் செய்யப்படும். 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழகத்தில் 2 திருக்கோயில்களில் தான் அன்னதானம் திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரம் ஆகிய 3 கோயில்களுக்கும் அன்னதான திட்டத்தினை விரிவுப்படுத்த உத்தரவிட்டுள்ளார்கள். 

திருக்கோயில்களில் காலை, நண்பகல், இரவு என்று சன்னிதானம் மூடும் வகையில் கடைகளை தேடி பசியோடு பக்தர்கள் அலைய வேண்டாம் என்ற நல்ல நோக்கத்தோடு, தமிழகத்தின் பசிபோக்கும் மாமருந்தாக விளங்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 16.09.2021 அன்னதான திட்டத்தினை தொடங்கி வைக்க உள்ளார்கள். 

தமிழ்நாட்டில் பல்வேறு துறைகள் இருந்தாலும் இந்து சமய அறநிலையத்துறைக்கு தேவையான திட்டங்களுக்கு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார்கள் என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். 

தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்று 124 நாட்களிலேயே 300 திருக்கோவில்களுக்கு திருப்பணிகள் செய்வதற்கு ஒப்புதல் வழங்கிய பெருமை  தமிழ்நாடு முதலமைச்சர்  தலைமையில் இருக்கின்ற இந்து சமய அறநிலையத்துறையை சேரும். 

தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்கு மேலாக திருப்பணிகள் மேற்கொள்ளாமல் உள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும்.  

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 10 அரசு கலை கல்லூரிகள் துவங்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள். தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்,  சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர், மீன்வளம் - மீனவர் நலத்துறை அமைச்சர் ஆகியோரின் கோரிக்கையினை ஏற்று விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் அரசு கலை கல்லூரி அமைய உள்ளது. 

கல்லூரி துவங்குவதற்கு தேவையான அனைத்து ஆக்கப்பூர்வமான பணிகளும் அறிவிப்பு வெளியான மறுநாளே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

திருச்செந்தூரில் ஏற்கனவே செயல்படாமல் மூடப்பட்டுள்ள அர்ச்சகர் பள்ளி மீண்டும் திறக்கப்பட்டு அதனை புணரமைத்து நவீன அர்ச்சகர் பயிற்சி பள்ளியாக மாற்றி தகுதியான ஆசிரியர்களை கொண்டு  செயல்படுத்தப்படும். 

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் எந்த அளவுக்கு தானம் செய்ய முன்வருகிறார்கள் என்பதை கணக்கெடுத்து கோசாலை அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். 

ஆய்வின்போது, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.செந்தில் ராஜ்,, உதவி ஆட்சியர் (பயிற்சி) ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன், திருச்செந்தூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வநாயகம், 

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் இணை ஆணையர் அன்புமணி, திருக்கோயில் உதவி ஆணையர் செல்வராஜ், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் செல்வி.ரோஜாலி, மற்றும் அலுவலர்கள் உடனிருந்தார்கள்.