தூத்துக்குடி சுப்பையா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்கும் வார விழா - ஆட்சியர் செந்தில்ராஜ் பள்ளி மாணவிகளுக்கு மாத்திரைகளை வழங்கினார்.!


தூத்துக்குடி சுப்பையா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்கும் வார விழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், பள்ளி மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை இன்று வழங்கினார்கள். மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, முன்னிலை வகித்தார்கள்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில் ராஜ் தெரிவித்ததாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றைய தினம் தேசிய குடற்புழு நீக்க முகாம் முதல் சுற்று 13.09.2021 முதல் 18.09.2021 வரை, இரண்டாம் சுற்று 20.09.2021 முதல் 25.09.2021 வரை மற்றும் விடுபட்டவர்களுக்கான சுற்று 27.09.2021 அன்றும் நடைபெற உள்ளது. 

ஒரு வயது முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும், 20 வயது முதல் 30 வயதுடைய தாய்மார்களுக்கும், கர்ப்பிணி மற்றும் தாய் பாலூட்டும் தாய்மார்கள் தவிர குடற்புழு நீக்க அல்பென்ட்சோல் மாத்திரை வழங்கப்பட உள்ளது.

குடற்புழு நீக்க மாத்திரை அனைத்து குழந்தைகளுக்கும், தாய்மார்களுக்கும் கொடுப்பதன் மூலம் குடலில் உள்ள புழு தொற்று நீங்குவதுடன் ரத்தசோகை ஏற்படாமல் தடுக்கிறது. 

மேலும் குடற்புழு தாக்கத்தினால் ஏற்படக்கூடிய வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, சோர்வு மற்றும் படிப்பில் ஆர்வமின்மை ஆகியவை தடுக்கிறது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் 4,58,495 குழந்தைகளுக்கும் மற்றும் 1,07,819 தாய்மார்களுக்கும் அல்பென்ட்சோல் மாத்திரை வழங்கப்பட உள்ளது. இந்த முகாம் 1583 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், 119 தனியார் பள்ளிகள் மற்றும் 1477 அங்கன்வடி மையங்களில் நடைபெற உள்ளது. 

எனவே பயனாளிகள் அனைவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து குடற்புழு நீக்க மாத்திரையை பெற்று புழு தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பல்வேறு நோயில் இருந்து பாதுகாத்து மாணவர்கள் அனைவரும் ஆர்வமுடன் படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் மரு.பொற்செல்வன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, சுப்பையா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தினிகௌசல் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மாணவிகள், அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.