உள்ளாட்சி தேர்தல்: பா.ம.க., தனித்து போட்டி - "அதிமுகவுக்கு சரியான தலைமை இல்லை" எனவும் குற்றசாட்டு.!


அதிமுகவுக்கு சரியான தலைமை இல்லாததால் அக்கட்சி தொண்டர்கள் நமக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை.  உள்ளாட்சித் தேர்தலில் தனித்து நின்று நமது வாக்கு சதவீதத்தை நிரூபிப்போம், என குற்றச்சாட்டு கூறிய பாமக நிறுவனர் ராமதாஸ் ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து, அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் இதுவரை உள்ளாட்சி தேர்தல் நடத்தாத ஒன்பது மாவட்டங்களில், அக்., 6, 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடக்கும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க, கட்சி தலைமை நிர்வாகிகள், ஒன்பது மாவட்ட துணை பொதுச்செயலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தை நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோர், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக நடத்தினர்.கூட்டத்தில், ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்யப்பட்டது.உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து, இன்றும், நாளையும் மனுக்கள் பெறப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில் இது குறித்து பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களின் துணைப் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நேற்று மாலை நடைபெற்றது.

அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாமக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது. கட்சியின் வளர்ச்சி, நலன் ஆகியவற்றை கருத்தில்கொண்டு இந்த முடிவை எடுத்ததாக அக்கட்சித் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணொலி காட்சி மூலம் நடைபெற்ற அந்த கூட்டத்தில் ராமதாஸ் பேசியவை குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. “சட்டமன்றத் தேர்தலின் போது கூட்டணித் தர்மத்தை அதிமுக காப்பாற்றவில்லை. அதிமுகவுக்கு சரியான தலைமை இல்லாததால் அக்கட்சி தொண்டர்கள் நமக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. நம்மால் கூட்டணிக் கட்சிகள் பயனடைந்தன ஆனால் அவர்களால் நமக்கு அவர்களால் பலன் இல்லை. உள்ளாட்சித் தேர்தலில் தனித்து நின்று நமது வாக்கு சதவீதத்தை நிரூபிப்போம். புதியதோர் விதி செய்வோம், அதை எந்நாளும் காப்போம்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியுள்ளார்.

ராமதாஸின் இந்த பேச்சு அரசியல் அரங்கில் அனலைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக அதிமுகவுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது .

அதிமுகவைப் பொறுத்தவரை சட்டமன்றத் தேர்தலில் மற்ற கட்சிகளைவிட பாமகவுக்கே கூட்டணியில் அதிக முக்கியத்துவம் அளித்தது. பாமக வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றியது, மற்ற கட்சிகளைவிட அதிக இடங்களை ஒதுக்கியது. தேர்தலுக்குப் பிறகும் பாமகவுக்கான முக்கியத்துவத்தை குறைக்கவில்லை. அதிமுகவை பாமக இளைஞரணித் தலைவர் விமர்சித்த போதும் அதிமுக அமைதி காத்தது. அதே சமயம் அதற்கு உடனடியாக எதிர்வினையாற்றிய புகழேந்தியை கட்சியிலிருந்தே நீக்கியது.

ஆனாலும் தற்போது பாமக கூட்டணியை முறித்துக்கொண்டு சென்றுள்ளது. பாமகவின் கூட்டணி முறிவு குறித்து அரசியல் நோக்கர்கள் கூறுகையில்,

வன்னியர் உள் இட ஒதுக்கீட்டுக்கு திமுக ஒப்புதல் அளித்தது, இட ஓதுக்கீட்டு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு நினைவு மண்டபம் கட்டுவது ஆகியவை வன்னியர் சமூகத்தினரிடம் திமுகவுக்கு வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. அத்துடன் ஆட்சியிலிருக்கும் கட்சியை பகைத்துக் கொள்ளவும் பாமக தயாராக இல்லை. இதனால் அந்தக் கூட்டணியில் போய் இணையாவிட்டாலும் மோதல் இல்லாமல் தொடரலாம் என்ற முடிவுக்கு பாமக வந்துவிட்டதாக கூறுகிறார்கள்.

‘தனித்துப் போட்டி’ என்ற தனது வழமையான கோஷத்தை முன்வைத்து பாமக வெளியேறியிருந்தாலும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

Previous Post Next Post