கொலை, கொள்ளை வழக்குகளில் கைதான 3பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம்.!

 

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். 

தூத்துக்குடி பாரதி நகர் பூங்கா பகுதியில் வைத்து, கடந்த 30.11.2022 அன்று ராஜகோபால் நகரை சேர்ந்த சங்கரன் மகன் பெரியநாயகம் (60) என்பவரை முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில் தூத்துக்குடி ராஜகோபால் நகரை சேர்ந்த நல்லகண்ணு மகன் பழனிக்குமார் (39) மற்றும் சிலரை சிப்காட் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

 தூத்துக்குடி சின்னகண்ணுபுரம் பகுதியில் கடந்த 02.12.2022 அன்று தேவர் காலனியை சேர்ந்த கொம்பையா மகன் பூல்பாண்டி (45) என்பவரை மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில் தூத்துக்குடி சில்வர்புரம் பகுதியை சேர்ந்த திருமணி மகன் மாரிமுத்து (35) என்பவரை சிப்காட் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீவைகுண்டம் அருகே ஆழ்வார்தோப்பு பகுதியில் கடந்த 29.11.2022 அன்று மேல கோட்டை வாசல் தெருவை சேர்ந்த முருகன் மகன் சண்முகசுந்தரம் (30) என்பவரது செல்போனை கொள்ளையடித்த வழக்கில் ஆழ்வார்திருநகரி மாதங்கோவில் தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் மாரிமுத்து (எ) கட்டமாரி (27) மற்றும் சிலரை ஸ்ரீவைகுண்டம் போலீசார் கைது செய்தனர். 

மேற்கண்ட வழக்குகளில் கைதான மூவரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில், ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளை., மத்திய சிறையில் அடைத்தனர். இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 14பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 43பேர் உட்பட 268 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post