திருப்பூரில் 3 பேரை பலி வாங்கிய குட்டையை மூடக்கோரி முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு... மாநகராட்சி அதிகாரி பொய் கடிதம் அனுப்பியதாக புகார்!

இடுவம்பாளையம் பள்ளி அருகில் 3 பேரை பலிவாங்கிய கழிவு நீர் தேக்க குட்டையை மூடக்கோரி முதல்வரின் தனிப்பிரிவுக்கு அளிக்கப்பட்ட மனுவிற்கு பொய்யான தகவல் அனுப்பிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சியின் 40 வது வார்டுக்குட்ப்பட்ட இடுவம்பாளையம் காமாட்சி அம்மன் கோவில் வடக்குப் புறத்தில் கடந்த 20ஆண்டுகளுக்கு முன்பாக மீன்வளர்ப்பு குட்டை ஒன்று அமைக்கப்பட்டது. பின்னாளில் இந்த பகுதி மாநகராட்சியான பிறகு இந்த குட்டையில் மீன் வளர்ப்பதில்லை.

 அந்த பகுதி முழுவதும் இருந்து வருகின்ற சாக்கடை நீர் மற்றும் மழை நீர் கலப்பாலும், குப்பைகள் தேங்கி புதர்மண்டியும் இந்த குட்டை பாழடைந்து போய்  உள்ளது. கடந்த 20ஆண்டுகளில் சேரும் சகதியுமாக பாழடைந்து புதர்மண்டி கிடக்கும் இந்த குட்டை துர்நாற்றம் வீசுவதுடன் பெரும் சுகாதாரச்சீர்கேடு ஏற்பட்டு அபாய பகுதியாக இருக்கிறது. இந்த குட்டையில் இதுவரை 3 பேர் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து இறந்தும் போய் இருக்கிறார்கள். 

இப்படி இந்த குட்டையால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாலும், உயிர்ப்பலி ஏற்படுத்திய இடமாக இருப்பதாலும், பாழடைந்து கிடக்கும் இந்தக் குட்டையை மூட வேண்டும் என்று கோரி இடுவம்பாளையம் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பினார். 

இந்த நிலையில், முருகேசனுக்கு திருப்பூர் மாநகராட்சி உதவி ஆணையர் செல்வநாயகம் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் கடந்த 9  ஆம் தேதி மாமன்ற உறுப்பினர் மற்றும் என்.ஜி.ஓ., அமைப்புகளுடன் இணைந்து மேற்படி குட்டை சுத்தம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இதையடுத்து சனிக்கிழமை மாலை முருகேசன் உள்பட 30க்கும் மேற்பட்டோர் அந்த குட்டைக்கு அருகில் திரண்டனர். அவர்கள் பாழடைந்த சாக்கடை தேக்கமாக இருக்கும் குட்டையை காண்பித்து, சுத்தம் செய்ததாக முதல்வரின் தனிப்பிரிவுக்கே பொய்யான கடிதம் அனுப்பி முறைகேடு செய்துள்ளதாக தெரிவித்தனர். 

மேலும் அவர்கள் கூறுகையில்,  ’இந்த பகுதி ஊராட்சியாக இருக்கும் போது மீன்வளர்ப்பு குட்டையாக கட்டப்பட்ட குட்டை பாழடைந்து போய் இதுவரை 3 உயிர்களை பலிவாங்கி உள்ளது. தற்போது சாக்கடைநீர் தேங்கி, புதர்மண்டி துர்நாற்றம் வீசுகிறது. இந்த குட்டையை மூடக்கோரி முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பினோம். 

அந்த மனுவிற்கு பதில் கடிதமாக முதல்வரின் தனிப்பிரிவுக்கு உதவி ஆணையர் செல்வநாயகம் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். கடித நகலை எங்களுக்கும் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் இந்த குட்டை கடந்த 9 ந்தேதி சுத்தம் செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இது முழுக்க பொய்யாகும். இந்த குட்டை சுத்தம் செய்யப்படாமல் அப்படியே இருக்கிறது. குட்டையை சுத்தம் செய்யாமலே சுத்தம் செய்ததாக முதல்வரின் தனிப்பிரிவுக்கு பொய்யான கடிதம் அனுப்பிய மாநகராட்சி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

அருகிலேயே 900 பேர் படிக்கிற பள்ளி இருக்கிற நிலையில் மாணவர்கள் உள்பட அனைவரது நலன் கருதி இந்த குட்டையை உடனடியாக மூட வேண்டும். என்றனர். பொதுமக்கள் முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு அனுப்பினால் அந்த மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், நடவடிக்கை எடுத்தது போல பொய்யாக கடிதம் அனுப்பிய அதிகாரியின் செயல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Previous Post Next Post