திருப்பூர் குழந்தை கடத்தல் விசாரணையில் ஐந்து தனிப்படைகள்.... சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு போலீசார் தேடுதல் வேட்டை

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்து 7 நாளே ஆன ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தில் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


திருப்பூர் செரங்காடு மூன்றாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கோபி (30). இவரது மனைவி சத்யா (28). இவருக்கு கடந்த 18-ம் தேதி வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் கோபி அவரை திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். இதற்கிடையே கடந்த 19-ம் தேதி சத்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. 

இந்நிலையில் குழந்தைகள் வார்டில் தாயும் சேயும் இருந்தனர். இருவரையும் கோபி மற்றும் உறவினர்கள் கவனித்து வந்தனர். மாலை கோபி வெளியே சென்று விட்டார். உறவினர்களும் அந்த பகுதியில் இல்லை. சத்யாவும் குழந்தையும் இருந்துள்ளனர். 
சத்யாவை வேறு வார்டுக்கு மாற்றி உள்ளனர். அப்போது அருகில் இருந்த பெண் ஒருவர் குழந்தையை பார்த்துக் கொள்வதாக கூறி வாங்கி உள்ளார். பின்னர் அவர் வெளியே செல்வதாகவும் சத்யாவின் மாமியாரிடம் குழந்தையை கொடுத்துவிட்டதாக தெரிவித்தார். இதில் சந்தேகமடைந்த சத்யா உள்ளே சென்று பார்த்தபோது குழந்தையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அ டைந்த அவர் அந்த பகுதியில் இருந்த நர்சுகள் மற்றும் காவலாளிகளிடம் தனது குழந்தை கடத்தப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். தொடர்ந்து குழந்தையின் பெற்றோர் கோபி மற்றும் சத்யாவிடம் விசாரணை நடத்தினர். மேலும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர். 
அதில் குழந்தையை கடத்தியதாக கூறப்படும் பெண் அவசர அவசரமாக மருத்துவமனையை விட்டு வெளியேறும் காட்சிகள் பதிவாகி இருக்கிறது. அவர் கையில் கைப்பை மட்டும் இருப்பதால் குழந்தையை கைப்பையில் வைத்து கடத்தினாரா அல்லது வேற யாரிடமும் கொடுத்து விட்டாரா என்பதும் போலீசார் விசாரிக்கிறார்கள. மேலும் இந்த சம்பவத்தில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிர படுத்தப்பட்டிருக்கிறது. குழந்தையை கடத்திய பெண்ணுக்கு மருத்துவமனைகள் ஊழியர்கள் ஏதாவது உதவினார்களா என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கிறார்கள். 
 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்து 7 நாளே ஆன ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.