சரவணா ஸ்டோர்ஸில் தீ விபத்து - தீ விபத்து தொடர்பாக அவசர வழக்காக விசாரிக்கக்கோரி சமூக ஆர்வலர் ஹென்றி திபேன் மனு.!

 

மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக அவசர வழக்காக விசாரிக்கக்கோரி மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குனர் ஹென்றி திபேன் மனு தாக்கல்

நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி தெரிவித்துள்ளார்

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே லேக் ஏரியா பகுதியில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் வணிக கட்டிடம் டிசம்பர் 5ஆம் தேதி புதிதாக திறக்கப்பட்டது. பத்து மாடிகளுடன் கூடிய இந்த சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் வணிக வளாகத்தில் சுமார் ஆயிரம் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதி உள்ளது. 

கீழ் தளத்தில் நகைக்கடையும், மேல் தளங்களில் ஜவுளி கடையும், அதற்கு மேல் உணவகங்களும் உள்ளன. மேலும், இங்கு வீட்டுக்கு தேவையான உபயோக பொருள்கள், உடைகள் என அனைத்தும் ஒவ்வொரு தளத்திலும் வைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், நேற்று மாலை சுமார் 3 மணி அளவில் சரவணா ஸ்டோர்ஸ் கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. பத்தாவது தளத்தில் இயங்கி வரும் உணவகத்தில் உள்ள சமையல் கூடத்தில் ஏற்பட்ட தீ மளமளவென பரவியது. இதனையடுத்து கடையில் இருந்த ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். தீ விபத்து குறித்த தகவல் உடனடியாக தல்லாகுளம் தீயணைப்பு துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தல்லாகுளம் தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்தால் 3 ஊழியர்களுக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தீ விபத்திற்கான காரணம் குறித்து மாட்டுத்தாவணி காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மதுரையில் மிக பிரமாண்டமாக திறக்கப்பட்டு சில மாதங்களே ஆன சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடையில் தீ விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post