தேர்தல் ஆணையர் நியமனம் - வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி.!!

 

இந்திய தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர் ஆகியோரை இனிமேல் பிரதமர், எதிர்கட்சி தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட குழுதான் நியமிக்கும் என்று உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. இது இந்திய தேர்தல் நடைமுறைகளில் மிகப் பெரிய சீர்திருத்தமாக பார்க்கப்படுகிறது.

இந்திய தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வந்த நிலையில் இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட கோரி, வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷன், கோபால் சங்கர் நாராயணன் உள்ளிட்ட பலரது சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பாக 7 நாட்களுக்கு மேல் விரிவான விசாரணை நடத்தப்பட்டது.

தேர்தல் ஆணையர்களுக்கான பதவியை நியாயமான சட்டத்தின்படி ஆறு ஆண்டுகள் என இருக்கிறது. ஆனால் 6 மாதங்கள் மட்டுமே பதவியில் இருக்கக்கூடிய ஒரு நபரை அரசு வேண்டும் என்றே தேர்ந்தெடுப்பது ஏன்? இப்படி இருந்தால் இந்த தேர்தல் ஆணையம் என்ற அமைப்பு சுதந்திரமான ஒரு அமைப்பாக எப்படி இயங்க முடியும். இதனை சரி செய்வதற்கு தன்னிச்சையாக இல்லாமல் வெளிப்படை தன்மையுடன் கூடிய வழிமுறைகளை பின்பற்றி தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆறு ஆண்டுகள் பதவி காலம் என்பது கட்டாயம் கடைபிடிக்கப்பட வேண்டும் என வாதிடப்பட்டது.

இதையடுத்து மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், "தேர்தல் ஆணையர்கள் எந்த ஆண்டு அதிகாரி, அவர்கள் பிறந்த தேதி, குறிப்பிட்ட பிரிவில் அவர்கள் எவ்வளவு சீனியர், அவர்களது சர்வீஸ் உள்ளிட்டவை முக்கியமான விஷயமாக கருத்தில் கொண்டுதான் நியமிக்கப்படுகிறார்கள்” என்றார்.

தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமிக்கப்பட்ட ஆவணங்களை தாக்கல் செய்த மத்திய அரசிடம் , “தேர்தல் ஆணையர் பதவி மே 15 முதல் காலியாக உள்ளது. மே 15 முதல் நவம்பர் 18 வரை நீங்கள் என்ன செய்தீர்கள் என எங்களுக்குக் காட்ட முடியுமா? ஒரே நாளில் அதிவிரைவாக இந்த நியமனத்தை ஏன் செய்தீர்கள்? மத்திய அரசு தாக்கல் செய்துள்ள ஆவணங்களின்படி பார்த்தால் தேர்தல் ஆணையர் பதவிக்கு நான்கு பெயர்கள் பரிந்துரையில் இருந்துள்ளது. இந்த நான்கு பெயரின் பரிந்துரையை எப்படி மேற்கொண்டீர்கள்? அதில் ஒருவரை எப்படி தேர்வு செய்கிறீர்கள்? என்பதை நாங்கள் வெளிப்படையாக தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.

இந்த கட்டமைப்பு பற்றி எங்களுக்கு மிகவும் அக்கறை இருக்கிறது. எந்த ஒரு தனிப்பட்ட நபர் குறித்தும் நாங்கள் எதிராக கருத்து கூறவில்லை. உண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த நபர் சிறப்பான நிர்வாக திறமை கொண்டவராக இருக்கிறாரா? தேர்தல் ஆணைய பதவிக்காக பரிந்துரைக்கப்பட்ட நான்கு பேரில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கக் கூடிய நபர்தான் மிகவும் இளையவர் அப்படி இருக்கும் பொழுது அவரை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்? என்பதை நாங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறோம்.

தலைமை ஆணையராக தேர்ந்தெடுக்கப்படுபவரின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் என நீங்கள் சொல்கிறீர்கள், தேர்தல் ஆணையர்களின் யார் மூத்தவரோ அவரே தலைமை தேர்தல் ஆணையராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் சொல்கிறீர்கள். ஆனால், விரைவாகவே ஓய்வு பெற போகக்கூடிய நபர்களை தேர்தல் ஆணையர்களின் பதவிக்கு தேர்ந்தெடுக்கிறீர்கள். இது ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக இருக்கிறதே” என நீதிபதிகள் சந்தேகத்தை எழுப்பினர்.

இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் 1991ம் சட்டப்பிரிவில் பிரிவு 6-ஐ ஒன்றிய அரசு மீறியுள்ளது மிகவும் தெளிவாக தெரிகிறது எனக்கூறி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த ஆண்டு நவம்பர் 24ம் தேதி ஒத்திவைத்திருந்தனர்.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தற்போது அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில், “தேர்தல் ஆணையர் நியமனங்கள் தொடர்பான விவகாரம் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது. அதனால் இதில் முறைகேட்டை தவிர்க்கும் விதமாக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. ஜனநாயகம் மக்களின் சக்தியுடன் பிரிக்க முடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது. வாக்குச் சீட்டின் வலிமை மிக உயர்ந்தது. மிகவும் சக்திவாய்ந்த கட்சிகளை வீழ்த்தும் திறன் கொண்டது. சகோதரத்துவம் மற்றும் சமத்துவம் பற்றிய கருத்துக்கள் புறக்கணிக்கப்படக்கூடாது.

ஜனநாயகத்தை ஆளும் கட்சிகள் எழுத்திலும் உணர்விலும் நிலைநிறுத்த முயற்சிக்கும் போதுதான் ஜனநாயகத்தை அடைய முடியும். மாநிலங்கள் மற்றும் பாராளுமன்றத்திற்கான தேர்தல்களை நடத்துவதற்கான கடமை மற்றும் அதிகாரங்கள் தேர்தல் ஆணையத்திற்கு விதிக்கப்பட்டிருப்பதை நாங்கள் காண்கிறோம். அவர்கள் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் செயல்படுவது கடமையாகும். இத்தகைய நியமனத்தின் அதிகாரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படலாம். அவ்வாறு இருந்தால், அது நாடு முழுவதும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். அரசியல் கட்சிகள் மற்றும் அதன் வேட்பாளர்களின் தலைவிதி தேர்தல் ஆணையத்தின் கைகளில் உள்ளது. அரசு சட்டப்படி இயங்க வேண்டும்.

ஜனநாயகத்தில், தேர்தலின் தூய்மை பேணப்பட வேண்டும். காக்கப்பட வேண்டும். இல்லையெனில் அது பேரழிவை தரும். கடும் விளைவுகளுக்கு வழிவகுக்கும். அதில் அனைவரும் பணியாற்றினால் மட்டுமே ஜனநாயகம் வெற்றிபெற முடியும். ஊடகங்கள் மற்றும் பிற விஷயங்களால் தேர்தல் இயந்திரங்களை தவறாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. சட்டத்தின் ஆட்சி என்பது ஜனநாயக ஆட்சியின் அடிப்படை அடித்தளமாகும். சட்டத்தின் ஆட்சிக்கு உத்தரவாதம் அளிக்காத தேர்தல் ஆணையம் ஜனநாயகத்திற்கு எதிரானது. தேர்தல் ஆணையம் சுயாதீனமாக இருக்க வேண்டும். நியாயமான முறையில் செயல்பட வேண்டும். அரசுக்குக் கடமைப்பட்ட நிலையில் உள்ள ஒருவர் சுதந்திரமான மனநிலையைக் கொண்டிருக்க முடியாது. சுதந்திரமான நபர் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அடிமையாக இருக்க மாட்டார்.” என பல அதிரடியான கருத்துகளை நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து பேசியுள்ள நீதிபதிகள், “இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஆகியோரை இதுவரை நேரடியான முறையில் நியமனம் மட்டுமே செய்யப்பட்டு வந்த நிலையில், இனிமேல் அவர்களை பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட குழு மட்டுமே நியமிக்கும். இந்த குழுவின் உத்தரவின் படியே அனைத்து நடைமுறைகளும் மேற்கொள்ளப்படும்.” என தீர்ப்பு வழங்கினர்.

மேலும், நாடாளுமன்றத்தால் சட்டம் இயற்றப்படும் வரை இந்த நடைமுறை தொடரும் என்றும், இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியிலிருந்து தேர்தல் ஆணையத்திற்கு நிதியுதவி மற்றும் தனிச் செயலகம் தேவை என்பது தொடர்பாக மாற்றத்தை செய்யுமாறும் அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியதோடு, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவது மிக முக்கியமானது என கூறி இந்த விவகாரம் குறித்த வழக்குகள் அனைத்தையும் முடித்து வைத்தனர்.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post