ஒரே குடும்பத்தில் 4 பேர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி வெங்கடேஷ் கைது... துப்பாக்கியால் சுடப்பட்டானா?

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் நான்கு பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி இரண்டு கால்கள் உடைந்த நிலையில் பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதி, கால்கள் உடைந்திருப்பதாகவும், போலீசார் சுட்டு பிடித்ததாகவும் தகவல் நிலவுகிறது. மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு செந்தில்குமார் என்பவரின் தோட்டத்திற்கு அருகே மது அருந்திய நபர்களை தட்டிக்கேட்ட அவரது குடும்பத்தார் மோகன்ராஜ்,புஷ்பவதி, மற்றும் ரத்தினம்மாள் ஆகிய நான்கு பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். 

கொடூரமாக நடந்த இந்த கொலை தமிழகம் முழுவதும் பெரிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கொலை நடந்த இடத்தில் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்து என்பவனை போலீசார் கைது செய்தனர்.

அவனிடம் விசாரணை மேற்கொண்ட போது தப்பி ஓட முயன்றதில் கால் முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக தற்போது கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

மேலும் போலீசார் ஐந்து தனிப்படை அமைத்து தென் மாவட்டங்களில் கொலையாளிகளை தேடி வந்தனர். கொலை சம்பவத்தில் தொடர்புடைய நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்கின்ற ராஜகுமாரின் தந்தை ஐயப்பன் என்பவனை நேற்று மாலை போலீசார் கைது செய்தனர். 

முன்னதாக நேற்று காலை இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்கின்ற ராஜ்குமார் மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த விஷால் என்கிற சோனை முத்தையா ஆகிய இருவரும் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் சரணடைய வந்தனர்.

அவர்கள் இருவரும் பல்லடம் போலீசாரால் கைது செய்யப்பட்டு ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், இன்று காலை இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான வெங்கடேஷ் என்கின்ற ராஜ்குமார் இரண்டு கால்களும் உடைந்த நிலையில் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளான்.

மேலும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளி வெங்கடேசன் என்ற ராஜ்குமாரின் கால்கள் எப்படி உடைந்தது? என்று இதுவரை போலீசார் தெரிவிக்கவில்லை.

 கால்களில் குண்டடி பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது, மேலும் விசாரணைக்காக அழைத்துச் செல்லும்போது தப்பிக்க முயற்சித்ததாகவும் அப்பொழுது காவல் துறையினர் தரப்பில் இரண்டு கால்களிலும் சுடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

 ஆனால் காலை 8 மணி வரை  காவல்துறை தரப்பில் எந்த ஒரு விளக்கமும் தற்போது வரை அளிக்கப்படாததால் இத்தகைய குழப்பங்கள் நிலவி வருகிறது. மேலும் கைது செய்யப்பட்ட இரண்டாவது குற்றவாளியாக கருதப்படும் விஷால் என்கிற சோனை முத்தையா ஏன் அழைத்துச் வரவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.இந்த நிலையில் காலை 9 மணியளவில் திருப்பூர் மாவட்ட போலீஸ் எஸ். பி., செய்தியாளர்களிடம் பேசுகையில், கொலை குற்றவாளி வெங்கடேஷ் சுட்டு பிடிக்கப்பட்டதாக உறுதி செய்துள்ளார்.

Previous Post Next Post