கோபிஅருகே இரவில் நாட்டு கோழி திருடிய இருவரை விடிய விடிய காத்திருந்து சுற்றி வளைத்து பிடித்து கிராம மக்கள் தர்ம அடி கொடுத்தனர்

கோபிசெட்டிபாளையம் அருகே இரவில் நாட்டு கோழி திருடிய இருவரை விடிய விடிய காத்திருந்து சுற்றி வளைத்து பிடித்து கிராம மக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கடுக்காம்பாளையத்தில் இரவில் நாட்டு கோழி திருடிய இருவரை விடிய விடிய காத்திருந்து சுற்றி வளைத்து பிடித்து கிராம மக்கள் தர்ம அடி கொடுத்தனர். 

உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் இருந்த கோழி திருடிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கடுக்காம்பாளையம், வெங்கமேடு, கோரக்காட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 4 ஆண்டுகளாக விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் வளர்த்து வரும் ஆடுகள், நாட்டு கோழிகள் இரவு நேரங்களில் திருடப்பட்டு வந்தது. ஆடு மற்றும் கோழி திருட வரும் கும்பல், வீட்டின் முன்பக்க கதவை பூட்டி விட்டு திருடி செல்வதும், ஆடுகளை விவசாய நிலத்தில் கழுத்தை அறுத்து கொன்று எடுத்து செல்வதும் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது

இந்நிலையில் நேற்று இரவு கடுக்காம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட வெங்கமேட்டில் ஒரு பெண் வீட்டிற்கு ஸ்கூட்டரில் சென்ற இரண்டு திருடர்கள், வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு, அங்கு இருந்த 15 க்கும் மேற்பட்ட நாட்டு கோழிகளை திருடி, அங்கு இருந்த பெண்ணின் துணியில் வைத்து மறைத்து எடுத்துள்ளனர். கோழிகளின் சத்தம் கேட்டு பெண் வெளியே வர முயன்ற போது, கதவு பூட்டப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தவர் இதுகுறித்து அருகில் உள்ளவர்களுக்கு செல்போன் மூலமாக தகவல் தெரிவித்து உள்ளார்.

அதைத்தொடர்ந்து கிராம மக்கள், பெண்ணின் வீட்டிற்கு வந்த போது, கோழிகளை திருடிக்கொண்டு இருந்த இருவரும், திருடிய கோழிகளை விட்டு விட்டு அங்கிருந்து ஓடி அருகில் இருந்த கரும்பு காட்டிக்குள் புகுந்து தப்பினர். இரவு நேரமென்பதால் அவர்களை பிடிக்க முடியாது என்பதால் கொள்ளையர்கள் தப்பி செல்லாமல் இருக்க கரும்பு காட்டை சுற்றிலும் விடிய விடிய கிராம மக்கள் காவல் இருந்தனர்.

அதைத்தொடர்ந்து காலை காட்டை விட்டு வெளியே வந்த திருடர்கள் ஆளுக்கொருபுறம் தப்பியோடவே, ஆத்திரமடைந்த கிராம மக்கள் அவர்களை விரட்டிச்சென்று மடக்கி பிடித்தனர். நான்கு ஆண்டுகளாக பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆடு, கோழிகளை இழந்த கிராம மக்கள் ஆத்திரத்தில் பிளாஸ்டிக் பைப், மூங்கில் தடி என கையில் கிடைத்த பொருட்களால் சரமாரியாக தாக்கினர். 

மேலும், எந்தெந்த வீட்டில் ஆடு, கோழி உள்ளது என தகவல் தெரிவிக்கும் கூட்டாளிகள் யார் எனக்கேட்டு சுமார் 100 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தாக்கினர். கிராம மக்களின் தாக்குதலால் படுகாயமடைந்த திருடர்கள் சுருண்டு விழுந்தனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த சிறுவலூர் காவல்துறையினர்,சம்பவ இடத்திற்கு சென்று கோழி திருடி கிராம மக்களிடம் பிடிபட்ட கோபி அருகே உள்ள பொலவக்காளிபாளையம் இந்திராநகரை சேர்ந்த கிருபாகரன் என்பவரையும் அதே பகுதியை சேர்ந்த நவீன்குமார் என்பவரையும் மீட்டனர். 

இருவரும் படுகாயமடைந்த நிலையில் இருந்ததால் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பிடிபட்ட கிருபாகரன் மீது 6 க்கும் மேற்பட்ட திருட்டு, கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த மாதம் பங்களாபுதூர் காவல்நிலைய பகுதியில் மளிகை கடையின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், ஜாமீனில் வந்தவுடன் நவீன்குமாரை அழைத்துக்கொண்டு கோழி திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. 

பிடிபட்ட நவீன்குமார் கோபி அருகே பங்களாபுதூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இசிஇ படைப்பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வருவதும், கல்லூரி தோழர்களுடன் ஜாலியாக இருக்க பணம் தேவைப்பட்ட நிலையில், பெற்றோரும் கூலி வேலை செய்து படிக்க வைப்பதால், அவர்களிடமும் செலவிற்கு பணம் கேட்க முடியாது என்பதால் கிருபாகரனுடன் சேர்ந்து கோழி திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

கோழி திருடிய இருவரை விடிய விடிய காத்திருந்து சுற்றி வளைத்து பிடித்து கிராம மக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Previous Post Next Post