கடவுளின் தேசமான உத்தரகாண்டில் ஒரு அருமையான சீதோஷ்ணத்தில் அமைந்த ஒரு அழகிய ஏரிதான் நைனிதால் ஏரி. அழகும், புனிதமும் நிறைந்த இந்த நைனிதால் ஏரிக்கரையில் நைனா தேவி கோவில் அமைந்திருக்கிறது. 51 சக்திபீடங்களில் முக்கியமானதாக இருக்கக்கூடிய இடம் இது. சதிதேவியின் கண்கள் விழுந்த பகுதி இந்த நைனிதால் ஏரிதான். கண்களில் இருந்து வழிந்த கண்ணீரால் இந்த நைனிதால் ஏரி உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. கண் வடிவத்தில் மலைகளுக்கிடையில் அழகால் நம்மை ஈர்க்கக்கூடிய நைனிதால் ஏரிக்கரையில் நைனாதேவி கோவில் அம்சமாக அமைந்திருக்கிறது. நைனாதேவியை நந்தாதேவி என்றும் அழைக்கிறார்கள்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் நைனிடால் நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள ஒரு இயற்கை நன்னீர் ஏரி ஆகும். காத்கோடம் மற்றும் ஹல்த்வானி ரயில் நிலையங்களில் இருந்து சுமாராக 1 மணி நேர பயணத்தில் செல்ல முடியும். நமது ஆதி கைலாஷ் யாத்திரையில் நாம் காணக்கூடிய முக்கியமான சக்திபீடம் நைனிதால் ஆகும்.
நைனிதால் ஏரியும், நைனாதேவி கோவிலும் பல ஆயிரம் ஆண்டுகளாக மக்களால் கும்பிடப்பட்டு வந்திருக்கிறது. இமயமலையில் சிவாலிக் மலைத்தொடரில் அமைந்துள்ள இந்த ஏரியும், நைனாதேவி கோவிலும் குஷானர் காலமாகிய முதலாம் நூற்றாண்டிலேயே கும்பிடப்பட்டதாக வரலாறுகள் கூறுகிறது. ஆனால் இங்கு வந்த பிரிட்டிஷ்காரர்கள் 1800களில் தாங்களே இந்த ஏரியை கண்டுபிடித்ததாக பெயர் வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் அதற்கு முன்னதாக 1450களில் சந்த் மன்னர்கள் காலத்தில்கூட நைனாதேவி கோவில் கட்டப்பட்டு வழிபடப்பட்டு வந்ததாகவும் சான்றுகள் இருக்கின்றன.
உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வரக்கூடிய முக்கியமான சக்திபீடம் இந்த கோவில். நைனிதாலில் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றான நைனா தேவி கோவிலில் உள்ள சிலை 1842 ஆம் ஆண்டு மோதி ராம் ஷா என்ற பக்தரால் நிறுவப்பட்டிருக்கிறது. 1880 ஆம் ஆண்டு நைனிதாலில் ஏற்பட்ட நிலச்சரிவுகளின் போது கோவில் அழிந்து போனது. பிறகு இந்த கோயில் 1883 ஆம் ஆண்டு மீண்டும் கட்டப்பட்டுள்ளது. அப்போதிருந்து, நைனாதேவி தங்களை பாதுகாத்து வருவதாக குமாவோன் பகுதி மக்கள் நம்புகிறார்கள். முக்கியமான சக்திபீடமாக இருப்பதால் உலகின் எல்லா பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து சாமிதரிசனம் செய்கிறார்கள்.
நைனாதேவி கோவிலுக்கு வந்து வழிபட்டால் கண் தொடர்பான நோய்கள் குணமாகும் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. கோவிலுக்குள்ளே செல்லும்போது நைனாதேவியின் கண்கள் செதுக்கி இருப்பதை பார்க்கலாம். நைனாதேவியுடன் ஒருபுறம் விநாயகரும், மறுபுறம் காளிதேவியும் அருள்பாலிக்கிறார்கள்.
கோவில் வளாகத்தில் பெரிய அரசமரம் இருக்கிறது. இது பார்வதி தேவியின் வடிவமாக இருக்கிறது.
குமாவோன் பகுதியின் சந்த் மன்னர்களின் விருப்பமான தெய்வமாகவும் நந்தா இருந்தார், அவர்கள் இங்கு வந்து தவறாமல் வழிபட்டு வந்தனர். சந்திரவன்ஷி வம்சத்தைச் சேர்ந்த ஒரு இளவரசிக்கு நந்தா என்று பெயரிடப்பட்டதாகவும், பின்னர் அவள் ஒரு தெய்வமாக வணங்கப்பட்டதாகவும் ஒரு புராணக்கதை உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நந்தா அஷ்டமி நாளில், கர்வால் மற்றும் குமாவோன் மக்களால் நந்த பார்வதிக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. இங்குள்ள மக்கள் இந்த வடிவத்தில் நந்தாவின் 'நைனிடாலை'ச் சுற்றி சுற்றி வருகிறார்கள்.நைனிதால் ஏரியின் வடக்குப்பகுதியை மல்லிதால் என்றும் தெற்குப்பகுதியை தல்லிதால் என்றும் அழைக்கிறார்கள்.
திரிஷி சரோவர் என்று அழைக்கப்படும் நைனிதால் ஏரி தீர்த்தம் மானசரோவர் தீர்த்தத்துக்கு இணையாக கருதப்படுகிறது. இமயமலை மடிப்புகளில் கண்வடிவத்தில் அழகு மிளிரும் நைனிதால் ஏரியில் படகில் உலா வந்து, நைனாதேவி கோவிலில் தரிசனம் செய்வது ஆனந்த அனுபவம் தான்.
நைனாதேவி, விநாயகர், காளிமாதாவை வணங்கிவிட்டு, பரிவார தெய்வங்களான கிருஷ்ணர் உள்ளிட்ட தெய்வங்களையும், நவகிரகங்களையும் கும்பிடலாம்.
பொறுமையாக சாமிதரிசனம் எல்லாம் முடித்துக் கொண்டு,நேரமிருந்தால் ரோப்காரில் பயணித்து நைனி ஏரியின் கழுகுப்பார்வை காட்சியை காணலாம். நைனிதால் மால் ரோட்டில் ஷாப்பிங் போகலாம்.
மொத்தத்தில் நைனிதால் ஒரு உற்சாக அனுபவமாக இருக்கும். மே.25.ல் சக்திபீட தரிசனம் காண்போம்,