பைரவரின் அவதாரமாக அருளும் நீதிதேவன் கொலுதேவ்தா!.. பித்தளை மணி தோரணங்கள் வரவேற்கும் அற்புத கோவில்!

இமயமலையின் ஃபைன் மரக்காடுகள் வழியாக மிதமான சீதோஷ்ண நிலையில் பயணித்தால் அல்மோரா மாவட்டத்தில் அமைந்திருக்கிறது சித்தை கொலு தேவ்தா கோவில். கொலு தேவதை என்றதுமே நம்மவர்கள் பெண் தெய்வம் என்றே நினைப்போம். ஆனால் கொலு ஒரு ஆண் தெய்வமாக இருக்கிறார். 


கிட்டத்தட்ட கி.பி.500 ஆம் ஆண்டில் இருந்து 1200க்கு உட்பட்ட காலத்தில், இமயமலையின் குமாவோன் பகுதியை ஆண்ட சந்த் மன்னர்களின் காலத்தில் அப்பகுயின் மன்னராக வாழ்ந்து நீதி வழங்கியவர் தான் கொலு தேவ்தா. இவர் கத்யூரி வம்சத்தை சேர்ந்தவர், சூர்யவம்சத்தை சேர்ந்தவர் என கருத்துகளும், இவரது தோற்றம் பற்றிய வெவ்வேறு கதைகளும் உண்டு. கத்யூரி மன்னர் வம்சத்தில் பிறந்த தெய்வக்குழந்தையாக கருதப்பட்டு மன்னராகி, பின்னர் கடவுளுமாகியவர் கோலு. 


இவரை கொலு தேவ்தா, கோலு, கோல்ஜ்யூ என்று பல்வேறு பெயர்களின் இப்பகுதி மக்கள் வணங்குகிறார்கள். கொலு தேவ்தா கெளர் பைரவரின் அவதாரமாக கருதப்படுகிறார். நீதிதேவனாக மக்கள் வணங்குகிறார்கள்.  கொலுதேவ்தா   ஜால் ராய் என்கிற மன்னருக்கும் மற்றும் ராணி கலிங்காவுக்கு பிறந்த மகனாகவும், கத்யூரி மன்னரின் தளபதியாகவும் கருதப்படுகிறார். இவர் தனது காலத்தில் ராஜ்யம் முழுக்கவும் வெள்ளைக்குதிரையில் சென்று மக்களின் பிரச்சினைகளை அறிந்து நீதி வழங்கி இருக்கிறார். 


1000 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கோவிலில் கொலு தேவ்தா வணங்கப்படுவதாக சொல்கிறார்கள். இமயமலையின் பல்வேறு கிராமங்களில் கோலுவுக்கு கோவில்கள் உண்டு. ஆனால் இப்பகுதி மக்களால் சித்தையில் நீதிதேவனாக கும்பிடப்படுகிறார் இங்குள்ள கொலு தேவ்தா கோவில் முழுக்க தோரணங்களாக பித்தளை மணிகளும், காகித சீட்டுகளும் நிறைந்து இருக்கின்றன.  


இங்கு வரும் மக்கள் தங்கள் பிரச்சினைகளை ஒரு காகிதத்தில் கடிதமாக எழுதி கொலுதேவதாவை வேண்டி கோவில் வளாகத்தில் கட்டுகிறார்கள். பின்னர் அவர் கோரிக்கைகளை நிறைவேற்றியதும் பித்தளை மணியை வாங்கி வந்து கட்டி கொலு தேவ்தாவுக்கு நன்றி தெரிவிக்கிறார்கள். 


வழக்குகளுக்கு தீர்வு வேண்டி, காணாமல் போன பொருள் கிடைக்க வேண்டுவது, குழந்தை வேண்டுவது, திருமணம் வேண்டுவது என பல்வேறு வேண்டுதல்களை எழுதி வைக்கிறார்கள். இதை சுனாரி வேண்டுதல் என அழைக்கிறார்கள். சுனாரி கட்டினால் நிச்சயம் வேண்டுவது கிடைக்கும் என்பது குமாவோன் மற்றும் கர்வாலி இன மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. 


இந்த வளாகம் முழுவதும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதால் சிறியதும் பெரியதுமாக ஏராளமான பித்தளை மணிகளை கட்டி இருக்கிறார்கள். இங்குள்ள பல்லாயிரக்கணக்கான மணிகளும், வேண்டுதல் சீட்டுகளும் கோவில் வளாகத்துக்கு வித்தியாசமான தோரணங்கள் போல காட்சியளிக்கின்றன. 


கோவிலுக்குள் சென்றால் வித்தியாசமான அனுபவம் பெறலாம். நம் ஊர் அம்மன் கோவில்களை போல கொலுதேவ்தா கோவிலிலும் ஒரு வித்தியாசமான தெய்வீக அம்சத்தை உணர முடியும். மணிகளை ஒலிக்க விட்டு சென்று கருவறையில் புடைப்புச்சிற்ப சிலையாக குதிரைமேல் காட்சி தரும் கோலுவை வழிபட்டு வேண்டுதலை வைக்கலாம். 


கோலு தேவதைக்கு நெய் , பால், தயிர், அல்வா, பூரி  போன்ற பதார்த்தங்களையும் வெள்ளை ஆடைகளையும் படைக்கிறார்கள். இமயமலைப்பகுதி மக்கள் இந்த ஊரில் எந்த சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தினாலும் முதலில் கொலு தேவனை வணங்கி விட்டுத்தான் பணிகளை தொடங்குகிறார்கள். ஜெய் இஷ்ட தேவ், ஜெய் நியாய் தேவ்தா, ஜெய் கோல்ஜூ போன்ற மெய் சிலிர்க்கும் கோஷங்களுடன் பக்தர்கள் கோலுவை வணங்குகிறார்கள். 


நாமும் மணிகளோடு மகத்துவமும் நிறைந்த கோலுவின் கோவிலை மே.23ந்தேதி தரிசிக்கலாம்.