இந்தியாவின் இரண்டாவது உயரமான மலைச்சிகரம் தான் நந்தா தேவி. உத்தரகண்ட் மாநிலத்தின் பெருமையாக, கம்பீரமான அடையாளமாக நிற்கிறது. 25 ஆயிரத்து 63 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மலை கர்வால் இமயமலையின் மேற்கு கிளையின் ஒரு பகுதியாகும். இந்த சிகரத்தின் சுற்றுப்பகுதியில் நந்தாகினி நதி உற்பத்தியாகி ஓடுகிறது.
இந்த நந்தாதேவி சிகரமானது துர்க்கையின் வடிவமாகும். இமயமலையின் பல்வேறு மலைக்கிராமங்களில் நந்தாதேவி கும்பிடப்படுகிறார். அப்படி வழிபடப்படும் ஒரு முக்கியமான இடம் தான், உத்தரகாண்டில் அல்மோராவில் உள்ள நந்தாதேவி கோவிலாகும்.
நந்தா தேவியைப்பற்றி ஸ்ரீ தேவி பகவத் புராணம், ஸ்கந்த புராணம் மற்றும் துர்கா சப்தசதி போன்ற பண்டைய நூல்கள் குறிப்பிடுகின்றன. சைலபுத்ரி என்றும் அழைக்கப்படும் நந்தா தேவி இமயமலையின் மகளாக கருதப்படுகிறார். பார்வதி தேவியின் ஒன்பது வடிவங்களில் ஒன்றாகும். இயற்கையின் தெய்வமான நந்தாதேவி மலை மக்களையும் நிலத்தையும் பாதுகாப்பதாக நம்பப்படுகிறது. அவரை குலதெய்வமாக கும்பிடுகிறார்கள்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, நந்தா தேவி சந்த் மன்னர்கள் நந்தாதேவியை குல தெய்வமாக கும்பிட்டு வந்திருக்கிறார்கள். 1690 ம் ஆண்டில், அப்போதைய மன்னர் உத்யோத் சந்த் என்பவர் தற்போதைய நந்தா தேவி கோவிலில் பார்வதிஸ்வரர் மற்றும் உத்யோத் சந்திரேஷ்வர் என்ற இரண்டு சிவன் கோயில்களைக் கட்டினார். இன்றும் கூட இந்தக் கோயில்கள் உத்யோத் சந்திரேஸ்வரர் மற்றும் பார்வதிஸ்வரர் என்ற பெயர்களால் பிரபலமாக உள்ளன.
மக்களை பாதுகாக்கும் நந்தாதேவியை அப்பகுதி மக்கள் அன்புடன் வழிபட்டு வருகின்றனர். பிரிட்டிஷ் கமிஷனர் ஜார்ஜ் ட்ரெயில் என்பவர் நந்தாதேவியை வழிபட்டு கண்பார்வை பெற்றதாக செவி வழி செய்திகள் கூறுகின்றன.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது, நந்தா தேவி கோயிலில் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் தந்தை மோதிலால் நேரு, குமாவோன் மக்களை பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் சேர இந்த கோயிலின் வளாகத்திலிருந்து ஊக்கப்படுத்தி உள்ளார். 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற புகழ்பெற்ற கொடி சத்தியாக்கிரகத்தில், பிரிட்டிஷ் அதிகாரத்தை மீறி இந்த கோவில் கொடிகம்பத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றினர். இதனால் இன்னமும் கோவில் வளாகத்தில் பாரத மாதாவுக்கும் சிலை வைத்து வணங்குகிறார்கள்.
ஒவ்வொரு 12 வருடங்களுக்கும், ’நந்தா தேவி ராஜ் ஜாட்’ என்ற பண்டிகை இங்கு கொண்டாடப்படுகிறது. பழமையான கோவிலாதலால் தனித்துவமான சிற்பங்கள் இருக்கின்றன. நந்தாதேவி சிகரத்தை போலவே இரண்டு பெரிய சிலைகளாக நந்தா - சுனந்தா என சகோதரிகளாக அருள்பாலிக்கிறார்கள். இவருடைய கிரீடம் தனித்துவம் மிக்க அமலகா கிரீடம் ஆகும். ஸ்தல விருட்சமாக அரச மரம் இருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளை கடந்த கற்கோயில் தனித்துவமாக நம்மை ஈர்க்கும்.
நைனிடாலில் உள்ள நைனா தேவி கோவிலும் நந்தாதேவியாக கும்பிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மலைமகள் நந்தாதேவியை அல்மோராவில் மே.23.ந்தேதி கும்பிடலாம்.