Sacred place for Connecting with God... பாதாளபுவனேஷ்வர் குகைக்கோவில்!

பல அதிசயங்களை தன்னுள் வைத்திருக்கும் இமயமலையின் மடியில் யுகங்களை கடந்து கும்பிடப்படும் ஒரு அற்புதமான கோவில்தான் பாதாள புவனேஷ்வர் கோவில். 

இந்த யாத்திரையில், மலைமேல் ஏறி உயர உயரச்செல்லும் நமக்கு, மலை இடுக்கில் மண்ணுக்குள் புதைந்திருக்க கூடிய ஒரு அற்புதமான லைம்ஸ்டோன் குகைதான் பாதாள புவனேஷ்வர் குகை கோவில். 12 லட்சம் ஆண்டுகளைக் கொண்ட திரேதாயுகத்திலேயே இந்த குகைக்கோவிலை சூர்ய வம்ச அரசனான ரிதுபர்ணா என்பவர் கண்டுபிடித்து சாமிதரிசனம் செய்திருக்கிறார். தற்செயலாக ரிதுபர்ணா சென்றபோது இந்த குகைக்குள் ஆதிசேஷனே வழிகாட்டியாக அழைத்துச் சென்று கடவுளர்களை காட்டியதாக நம்பப்படுகிறது. 33 கோட்டி தேவர்களும் இந்த குகையில் அருள்பாலிப்பதாக நம்பப்படுகிறது. 

ரிதுபர்ணாவுக்கு பிறகு மறைந்து போன பாதாள புவனேஷ்வர் குகையை துவாபர யுகத்தின் இறுதியில் பஞ்சபாண்டவர்கள், தரிசனம் செய்து இருக்கிறார்கள். பஞ்சபாண்டவர்கள் சொர்க்கத்தை அடைய பத்ரிநாத் அருகில் உள்ள மனா கிராமத்தில் ஸ்வர்கரோஹிணி வழியாக சொர்க்கத்தை சென்றடையும் முன்னர் பாதாள புவனேஷ்வரில் சிவபெருமானை தரிசனம் செய்ததாக குறிப்பிடுகிறார்கள். 

அப்புறம் இந்த குகை பல லட்சம் ஆண்டுகள் மண்மூடிப்போய் விட இறுதியாக தற்போது நடக்கக் கூடிய கலியுகத்தில், கி.பி.819 ல் ஆதி சங்கரர் கண்டுபிடித்து இருக்கிறார். கேரளாவில் இருந்து புறப்பட்ட ஆதிசங்கரர் கால்நடையாக இமயமலைக்காடுகளில் சென்ற போது பாதாள புவனேஷ்வர் குகையை அறிந்து பூஜையும் செய்திருக்கிறார். அதற்கு முன்னதாக 6ம் நூற்றாண்டை சேர்ந்த ஸ்கந்தபுராணத்தில் 103 வது அத்தியாயமான மானஸ்கந்தாவில் பாதாள புவனேஷ்வரை பற்றி குறிப்பிடப்படுகிறது. 

தற்போது பாதாள புவனேஷ்வர் குகையும், சுற்றியுள்ள பகுதிகளும் மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறையால் பாதுகாக்கப்படுகின்றன. 

கோவிலுக்கு அருகில்  இருப்பதால் இந்த மலைக்கிராமப் பகுதி பாதாள் புவனேஷ்வர் என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது. பைன், தேவதாரு மரங்கள் உயர்ந்து நிற்கின்றன. கோவிலின் நுழைவாக மேஜர் சமீர் துவார் என்கிற நுழைவாயில் இருக்கிறது. 1999ல் அசாமில் போரில் உயிரிழந்த மேஜர் சமீர் நினைவாக இந்த நுழைவாயிலை அமைத்துள்ளனர். உள்ளே நுழைந்து சில நூறடிகள் நடைபாதையில் சென்றால் பாதாள் புவனேஷ்வர் கோவில் வருகிறது. 

செல்லும் வழியில் பக்தர்கள் மணிகளை கட்டி இருக்கிறார்கள். இமயமலையின் குமாவோன் என்று சொல்லக்கூடிய இந்த சுற்றுவட்டாரப் பகுதி முழுக்க பல்வேறு கோவில்களில் பக்தர்கள் வேண்டுதலுக்காகவும், வேண்டுதல் நிறைவேறினாலும் மணிகளை கட்டி வழிபடுகிறார்கள்.  

குகையின் நுழைவில் தலையை குனிந்து உள்ளே சென்று, உட்கார்ந்தவாறு சங்கிலிகளை பிடித்துக் கொண்டு இறங்க வேண்டும். சுமார் 30 அடி ஆழம் இறங்கினால் உள்ளே ஒரு விசித்திர உலகமே இருக்கிறது. 90 அடி ஆழமும், 160 அடி நீளமும் கொண்டதாக இருக்கிறது இந்த குகை. பிரம்மாண்ட குகையில் குளிர்ச்சியும், புனிதமும் நிரம்பி வழிகிறது. 

இந்த குகையில் ஏராளமான அறியப்படாத பகுதிகள், மர்மங்கள் உள்ளன. குகைக்குள் நான்கு நுழைவாயில்கள் இருப்பதாக கூறுகிறார்கள். யுத்த்வார், பாப்த்வார், தர்மத்வார் மற்றும் மோக்ஷத்வார் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில்,  ராவணனின் மரணத்திற்குப் பிறகு பாப்த்வார் மூடப்பட்டதாகவும், குருசேத்திரப் போர் முடிந்த பிறகு யுத்த த்வார் மூடப்பட்டதாகவும் சொல்கிறார்கள். தற்போது, நாம் குகைக்குள் நுழையும் தர்மத்வார் என்கிற வழியும், உள்ளே இருக்கக்கூடிய மோட்சத்வார் என்ற வழியும் இருக்கிறது.

குகைக்குள் இறங்கியதும் நாம் இதுவரை காணாத விசித்திரமான லைம்ஸ்டோன் கற்களின் படிவங்களை காணலாம். ஆதிசேஷன் வடிவ பாறைப்படிவங்கள், சிவபெருமானின் ஜடாமுடியை தரிசிக்கலாம். 

விநாயகரின் மனிதத்தலையை சிவபெருமான் கொய்தபோது அது இங்கே வந்து விழுந்ததாகவும், அதை சிவபெருமானே பாதுகாப்பதாகவும் நம்பப்படுகிறது. அந்த விநாயகரின் தலைக்கு மேல் தாமரைவடிவப்பாறையில் இருந்து நீர் சொட்டி அபிஷேகம் செய்கிறது. 

இந்த குகையின் படிவங்களில், சப்தரிஷி மண்டலம், சிவனின் கமண்டலம், காமதேனு, கல்பவிருக்ஷம், நான்கு யுகங்களின் குறியீடு, பகீரதன் மற்றும் கங்கையின் வம்சாவளி என பல அமைப்புகளை, குகையை நிர்வகிக்கும் அறக்கட்டளையின் வழிகாட்டிகள் காட்டுகிறார்கள். விஸ்வகர்மாவால் பாண்டவர்களுக்காக உருவாக்கப்பட்ட சுனை ஒன்று உள்ளது. அனைத்தையும் வியந்து பார்த்துவிட்டு வரலாம். மெய் சிலிர்க்கும். 

இன்னும் சற்று திரும்பிச்சென்றால் பாதாள புவனேஷ்வர் லிங்க வடிவமாக அருள்பாலிக்கிறார். இந்த இடமும், ஆதிகைலாய மலையில் உள்ள பார்வதி சரோவரும் கடவுளுடன் இணைந்திருப்பதற்கான இடங்களாக சொல்லப்படுகிறது. பாதாள புவனேஷ்வருக்கு மூடி வைக்கப்படும் செப்புத்தகடு ஆதிசங்கரர் அமைத்து தந்ததாக நம்பப்படுகிறது. குகையின் உச்சியில் இருந்து நீர் சொட்டி பாதாள புவனேஷ்வரருக்கு நிரந்தர அபிஷேகம் செய்கிறது. அமைதியான பாதாள உலகத்தில் அவரை தரிசித்து விட்டு, சிலநிமிடங்கள் அமைதியாக தியானம் செய்யலாம். 

வளர்ந்து கொண்டே இருக்கக்கூடிய பாதாள புவனேஷ்வர் லிங்கம் ஒன்று இருக்கிறது. அது குகையின் உச்சியை முட்டினால் உலகமே அழிந்து விடும் என்றும் நம்புகிறார்கள். 

பூமி தோன்றியபோதே உருவானதாகவும், மூன்று யுகங்களாக கும்பிடப்படுபவருமான பாதாள புவனேஷ்வரை தரிசிக்க நமக்கு கிடைத்த வாய்ப்பு வரும் மே.21-ம் தேதி. தயாராக இருங்க...