திருநள்ளாறு சென்று வந்த போது குழியில் மொபட் விழுந்த விபத்தில் கணவன், மனைவி பலி... காயங்களுடன் விடிய விடிய தவித்த சிறுமி!
திருப்பூர்: இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு சென்று திரும்பிய தம்பதியினர் பாலத்திற்காக தோண்டப்பட்ட குழியில் தவறி விழுந்து பலியானது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் சூரியநல்லூர் பகுதியைச் சேர்ந்த நடராஜ்(48) ஆனந்தி(39) அவர்களது மகள் தீக்ஷிதா(15) . இவர்கள் மூவரும் குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் திருநள்ளாறு கோயிலுக்கு நேற்று முன் தினம் சாமிதரிசனம் செய்ய சென்றனர். திருநள்ளாறு கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு நேற்று இரவு அவர்கள் இருசக்கர வாகனத்திலேயே வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தனர்.
வாகனத்தை நடராஜ் இயக்கி வந்த நிலையில், அவரது மனைவி ஆனந்தி மற்றும் மகள் தீக்ஷிதா வாகனத்தில் அமர்ந்து வந்தனர்.
இவர்கள் தாராபுரம் அருகே குள்ளாய்ப்பாளையம் மாந்தோப்பு பாலத்தில் வந்து கொண்டிருந்த பொழுது பாலம் கட்டுவதற்காக அப்பகுதியில் குழி தோண்டி கான்கிரீட் போடும் பணிகள் நடந்து வந்த பகுதிக்கு வந்தனர். குழி தோண்டி வைக்கப்பட்டு இருந்த பகுதியில் தடுப்புகள் ஏதும் வைக்கப்படவில்லை. மேலும் விளக்குகளும் இல்லாததால் இருட்டில் குழிக்குள் வாகனத்தோடு விழுந்தனர்.
இந்த விபத்தில் நடராஜ் மற்றும் ஆனந்தி சம்பவ இடத்திலேயே பலத்த காயமடைந்து உயிரிழந்தனர். இவர்களது மகள் தீக்ஷிதா படுகாயமடைந்த நிலையில், குழிக்குள்ளேயே விடிய விடிய வலியால் துடித்துக் கொண்டிருந்தார். விடியற்காலையில் அந்த வழியில் வந்தவர்கள் தீக்ஷிதாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்தவர்களின் உடலினை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குழி தோண்டியவர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததே விபத்துக்கு காரணம் என்று அப்பகுதியினர் தெரிவித்தனர்.