திருவண்ணாமலையில் உத்தராயண புண்ணிய கால உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது

தி.மலை அண்ணாமலையார் கோவிலில் உத்தராயண புண்ணிய கால உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.



திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உத்தராயண புண்ணிய கால உற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. சூரியன் வடக்கிலிருந்து தெற்குநோக்கி பயணம் செய்யும் காலம் தட்சிணாயண புண்ணிய காலம் என்றும், தெற்கில் இருந்து வடக்கு நோக்கி சூரியன் பயணம் செய்யும் காலம் உத்தராயண புண்ணிய காலம் என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வாறு சூரியன் தனது பயணத்தை தொடங்கும் காலத்தை சிவாலயங்களில் விழாவாக கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா, ஆனி பிரம்மோற்சவம் உத்தராயண புண்ணியகால உற்சவம் ஆகியவற்றின் தொடக்கமாக சுவாமி சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான உத்தராயண புண்ணியகால உற்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை நடைதிறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதனைத் தொடர்ந்து விநாயகர் அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் சிறப்பு அலங்காரத்தில் மேளதாளம் முழங்க தங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினர். பின்னர் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க தங்க கொடிமரத்தில் கொடியேற்றினர். அப்போது கோவிலில் திரண்டிருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா உண்ணாமுலை அம்மனுக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். இவ்விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். 10 நாட்களும் காலை இரவு விநாயகர் சந்திரசேகரர் தனித்தனி வாகனங்களில் மாடவீதியில் மேளதாளம் முழங்க பவனிவந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 10ஆம் நாளான வரும் 15ந் தேதி தாமரைக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். மறுநாள் 16ந் தேதி அண்ணாமலையார் கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவூடல் உற்சவமும் மறுநாள் மறுஊடல் உற்சவமும் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் இரா.ஞானசேகர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


Previous Post Next Post